
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள சிறப்பு பிரிவில் அவருக்கு தொண்டை - நுரையீரலில் ஏற்பட்ட நோய் தொற்றுக்கான சிகிச்சையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
குழாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்க "டிரக்யாஸ்டமி' அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவரது உறவினர்களைச் சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக கூறினார்.