சர்க்காரியா கமிஷனில் இருந்து தப்பிக்க கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி: திமுகவை டாராக கிழித்த அமைச்சர்

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2020, 11:09 AM IST
Highlights

ஆனால் தமிழர்களின் பண்பாடு ஜல்லிக்கட்டை மீட்டது, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது அம்மாவின் அரசு தான். தமிழர்களின் உரிமைகள்  லட்சியங்கள் அனைத்தையும் காவு கொடுத்தது திமுக ஆட்சிதான்.

அனைத்து பிரச்சனைகளிலும் இரட்டைவேடம் போடும் திமுக இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் மற்றும் கடம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திரைப் படப் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழக மக்களை அவர்கள்  இனியும் ஏமாற்ற முடியாது. 

இது மட்டுமல்லாது பல விஷயங்களிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் ஹிந்தியில் பேசுவதை பெருமையாக பேசியவர் கருணாநிதி. மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்பள்ளிகளில் இடம்பெற திமுக எம்பிக்கள் டோக்கன் பெறுகின்றனர். உண்மையாகவே இவர்கள்  இந்தியை எதிர்த்தால் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பெற்ற இடங்களை திரும்ப  ஒப்படைத்து இருந்தால் திமுகவின் தமிழுணர்வை பாராட்டலாம். அதிலும் இரட்டை வேடம், திமுகவினர்  நடத்தும் பள்ளிகளிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார். மேலும் நீட்தேர்வு, ஜல்லிக்கட்டு, காவிரி நீர் பிரச்சனை, நெய்வேலி என்எல்சி பங்கு விற்பனை என பலவற்றிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. 

ஆனால் தமிழர்களின் பண்பாடு ஜல்லிக்கட்டை மீட்டது, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது அம்மாவின் அரசு தான். தமிழர்களின் உரிமைகள்  லட்சியங்கள் அனைத்தையும் காவு கொடுத்தது திமுக ஆட்சிதான்.  சர்க்காரியா கமிஷன் வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகவே கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்தார். ஆகவே எந்த பிரச்சனையிலும் திமுக இரட்டைவேடம் போடும் என்பது நாட்டு மக்களுக்கு தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தமிழர்களை காக்கின்ற ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே, இனியும் திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். மக்களை திமுக ஏமாற்றவும் முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

 

click me!