அவமானப்படுத்திய திமுக தொண்டர்கள்; பெருந்தன்மையோடு புறப்பட்ட ரஜினி!

First Published Aug 9, 2018, 2:03 PM IST
Highlights

தி.மு.க தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற ரஜினி கோபாலபுரத்தில் கிட்டத்தட்ட அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் மறைந்த செய்தி அறிந்த உடனேயே என்னுடைய கலைஞர் மறைந்த நாள் என் வாழ்வில் கருப்பு நாள் என்று ட்விட்டரில் இரங்கல் வெளியிட்டார் ரஜினி.

தி.மு.க தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற ரஜினி கோபாலபுரத்தில் கிட்டத்தட்ட அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் மறைந்த செய்தி அறிந்த உடனேயே என்னுடைய கலைஞர் மறைந்த நாள் என் வாழ்வில் கருப்பு நாள் என்று ட்விட்டரில் இரங்கல் வெளியிட்டார் ரஜினி. அந்த சமயத்தில் வெளியான இரங்கல்களிலேயே ரஜினியின் இரங்கல் தான் ட்விட்டரில் கூட டிரென்டாது. அதிலும் ரஜினி என்னுடைய கலைஞர் என்று இரங்கல் செய்தியில் கூறியிருந்தது நெகிழச் செய்வதாக இருந்தது.பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத், காங்கிரஸ் தலைவர் ராகுல் என பலரும் இரங்கல் தெரிவித்த நிலையிலும் ரஜினியின் இரங்கல் தான் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கலைஞரின் உடல் இரவு 9 மணி முதல் குடும்பத்தினர் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் வைக்கப்படும் என்று தி.மு.க சார்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால் கலைஞர் உடல் ஒன்பது மணிக்கு பிறகே கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தது. குடும்பத்தினர் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வைகோ, திருமாவளவன், மம்தா பானர்ஜி போன்ற அரசியல் தலைவர்களும் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு படையெடுத்தனர். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அங்கு திரண்டனர். 

இந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. கோபாலபுரத்தில் இருந்த போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கலைஞர் உடலை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் முன் கேட்டையே உடைத்துக் கொண்டு தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திற்குள் நுழைய ஆரம்பித்தனர். இதனால் போலீசார் மற்றும் தி.மு.க தொண்டர்படை வீட்டின் வாசலை மறித்துக் கொண்டு யாரையும் உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர். முக்கிய தலைவர்கள் மற்றும் கலைஞரின் குடும்பத்தினரை மட்டுமே அவர்கள் உள்ளே அனுமதித்தனர். இந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் ரஜினி திடீரென கோபாலபுரத்திற்கு வந்தார். 

அவரை காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் பாதுகாப்பாக கலைஞர் வீடு வரை அழைத்துவந்துவிட்டார். ஆனால் வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்களை தாண்டி ரஜினியால் உள்ளே செல்ல முடியவில்லை. அந்த சமயம் பணியில் இருந்த சில போலீசார் ரஜினியை சூழ்ந்து கொண்டு கலைஞர் வீட்டு வாயிலுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் யாரும் எதிர்பாராத வகையில் கலைஞரின் வீட்டு கிரில் கேட் திடீரென பூட்டப்பட்டது. ரஜினி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சமயத்தில் கலைஞர் வீட்டின் பாதுகாப்பிற்கு நிற்கும் தொண்டர் படையினர் கூட்டம் அதிகமாக உள்ளது உங்களால் உள்ளே செல்ல முடியாது என்று ரஜினியிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த கராத்தே தியாகராஜன், யாரை உள்ளே விடமாட்டேன் என்கிறீர்கள் தெரியுமா? என சப்தம் போட்டார்.

ஆனால் ரஜினியோ மிகவும் பெருந்தன்மையாக சரி நான் நாளை ராஜாஜி ஹாலிலேயே கலைஞருக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன் என்று கலைஞர் வீட்டு காவலர்களிடம் சொல்லிவிட்டு திரும்பினார். சொன்னது போலவே அதிகாலையிலேயே தனது குடும்பத்தினருடன் கலைஞருக்கு ராஜாஜி ஹாலில் சென்று ரஜினி அஞ்சலி செலுத்தினார். சரியாக ரஜினி வந்த போது எதற்காக கலைஞர் வீட்டின் கிரில் கேட் மூடப்பட்டது? ரஜினி சென்ற பிறகு மீண்டும் எதற்காக கிரில் கேட் திறக்கப்பட்டது? என்கிற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

click me!