கருணாநிதி சமாதிக்கு மகன்களுடன் வந்து பாலூற்றிய வைரமுத்து… கொந்தளிப்பில் ஸ்டாலின் குடும்பம் !!

First Published Aug 9, 2018, 1:55 PM IST
Highlights

உடல்நலக்குறைவால் மரணமடைந்து அண்ணா நினைவிடத்தில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் கருணாநிதியின் சமாதிக்கு இன்று அதிகாலை மகன்களுடன் வந்த கவிஞர் வைரமுத்து பாலூற்றி வணங்கினார். 

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்த சமாதியின் அருகில் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடியும் கட்டப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று  அதிகாலை முதல் கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்களும், பொது மக்களும் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று காலை  தனது மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு வந்தார். பின்னர் சமாதியின் மேல் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.சிறிது நேரம் கண்கலங்கியபடி அங்கு நின்றிருந்த கவிஞர் வைரமுத்து பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

கவிஞர் வைரமுத்துவைப் பொறுத்தவரை கருணாநிதி அவருக்கு 35 ஆண்டு கால நண்பர். பெரும்பாலும் நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது நேரிலோ அல்லது போன் மூலமோ இருவரும் பேசிக் கொள்வார்கள். சில நேரம் அதிகாலையில் வாக்கிங் போய் கொண்டே பேசிக் கொள்வார்கள்.

நேற்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கவிஞர் வைரமுத்து துக்கம் தாளாமல் கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை கவிஞர் வைரமுத்து, கருணாநிதி சமாதிக்கு வந்து பாலூற்றி வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் மூன்றாம் நாள் காலையில் இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே சமாதியில் பாலூற்றி வழிபடுவார்கள்.

ஆனால் ஸ்டாலின், அழகிரி என கருணாநிதியின் மகன்களை கலந்தாலோசிக்காமல் வைரமுத்து பாலூற்றி வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்காக கவிஞர் வைரமுத்து மேல் கருணாநிதி குடும்பத்தினர் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!