’போட்டிபோட எவனுமே இல்ல...’ கருணாநிதி- ஸ்டாலினை அதிர்ஷ்டத்தில் மிஞ்சிய உதயநிதி..!

By Thiraviaraj RMFirst Published Jul 4, 2019, 4:04 PM IST
Highlights

உதயநிதி கட்சி பணிகளில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அவருக்கு முக்கியப் பதவியை தூக்கிக் கொடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் தி.மு.க என்றாகி விட்டது. அந்த திமுக குடும்பத்தின் தற்போதைய நிலவரப்படி மூலவர் மு.க.ஸ்டாலின். தற்போதைய தலைவர். கருணாநிதியின் அரசியல் வாரிசு. அடுத்து மு.க.ஸ்டாலினின் அரசியல் வாரிசாக இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் உதயநிதி.  

கருணாநிதி - தயாளு அம்மாளின் மூன்றாவது மகன் ஸ்டாலின். அவரது மனைவி துர்காவதி. இவர்களது மகன் உதயநிதி ஸ்டாலின். மருமகள் கிருத்திகா. ஸ்டாலின் மகள் செந்தாமரை- மருமகன் சபரீசன். 1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை அழைத்து வந்தார் கருணாநிதி. அப்போது இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு ஸ்டாலினுக்கு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் வெறும் ஒப்புக்கு மட்டுமேதான் இருக்கும்.

ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால், அன்பகம் ஸ்டாலினுக்கு என மாறியது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதல்வரானார். இன்று, தி.மு.கவின் தலைவர். அடுத்த முதல்வர் வேட்பாளர். கட்சி இவரது கண் அசைவில் தான் நடக்கிறது. இப்போது ஸ்டாலினுக்காக்க உருவாக்கப்பட்ட பதவிக்கு அவரது மகன் உதயநிதி வந்துள்ளார். இனி இவரது கண்ணசைவுக்கும் கட்டுப்பட்டு கிடக்க வேண்டும் கழகத்தினர். 

மகன் உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் சினிமா கம்பெனி ஆரம்பித்தார். நடிகராக களமாடி வந்தார். கருணாநிதி, ஸ்டாலினைத் தொடர்ந்து தி.மு.கவை ஆளப்போவது இவர்தான். தற்போது திமுகவிற்காக ரகசிய திட்டங்களை தீட்டுவதும் செயல்படுத்துவதும் சபரீசன் தான். கருணாநிதிக்கு அவரது மருமகன் முரசொலி மாறன் மனசாட்சி என்றால் ஸ்டாலினுக்கு மனசாட்சி அவரது மருமகன் சபரீசன். இனி இவரது மைத்துனர் உதயநிதிக்கும் மனசாட்சியாய் இருக்கப்போகிறவரும் சபரீசனே. இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லாத அதிர்ஷ்டம் உதயநிதிக்கு வாய்த்திருக்கிறது. அதாவது மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகள் உழைத்த பின்னரே கட்சியின் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார்.

 

ஆனால் உதயநிதி கட்சி பணிகளில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அவருக்கு முக்கியப் பதவியை தூக்கிக் கொடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த விஷயத்தில் கருணாநிதியையே பின்னுக்குத் தள்ளி விட்டார் மு.க.ஸ்டாலின். இன்னொரு வகையிலும் உதயநிதி அதிர்ஷ்டக்காரரே... மு.க.ஸ்டாலினின் அதிகாரத்தில் பங்குகேட்டு சண்டைபோட அவருக்கு சகோதரர் மு.க.அழகிரி இருந்தார். உதயநிதி விஷயத்தில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. காரணம் மு.க.ஸ்டாலினின் ஒரே ஆண் வாரிசு உதயநிதி மட்டுமே.   

click me!