இன்று கவிழ்கிறதா குமாரசாமி அரசு ? கர்நாடகா அரசியலில் பதற்றம் !!

By Selvanayagam PFirst Published Jul 18, 2019, 8:26 AM IST
Highlights

கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்பது குறித்து சபாநாயகரே முடிவெடுக்கலாம் என்று  உச்ச நீதிமன்றம் தலையிடாது தீர்ப்பளித்த நிலையில் இன்று குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் அந்த தப்பிப் பிழைக்குமா ? என பெரும் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும்  மஜத கட்சிகளைச் சேர்ந்த 17  அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இருவரும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

 இதனால் கர்நாடக சட்டமன்றத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது இன்று பாஜக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறது. அதேவேளையில் கர்நாடக முதலமைச்சர்  குமாரசாமி ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளார்.

கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி அரசுக்கு 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போக குமாரசாமி அரசுக்கு 100 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும், பாஜகவுக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உட்பட 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. 

இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்கக் கர்நாடக சபாநாயகருக்குத்தான் முழு உரிமை உள்ளது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து மும்பையில் தங்கியுள்ள 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையைப் பெற்று கர்நாடக அரசு ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமலிங்க ரெட்டி குமாரசாமி அரசுக்கு எதிராகத் தான் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

நான் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன். எம்.எல்.ஏ ஆக எனது சேவையைத் தொடர்வேன்  என்று அவர் கூறியுள்ளார். அதே சமயத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

click me!