திமுக கூட்டணி பேச்சு: உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா..? அழகிரிக்கு எதிராக ‘கராத்தே’ போட தயாராகும் தியாகராஜன்!

By Asianet TamilFirst Published Sep 7, 2019, 7:15 AM IST
Highlights

நாங்குநேரியில் போட்டியிட திமுக முடிவு செய்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.  காங்கிரஸ் தலைவர்களும் நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் என்று உறுதியாகக் கூறிவருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அக்கட்சியின் நாங்குநேரி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசியதுதான் இப்போது திமுக கூட்டணியில் ஹாட் டாபிக்.
 

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று கருத்து கூறியதால் நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜனின் குரலை இப்போது நாங்குநேரி தேர்தலில் மறைமுகமாகப் பேசி கே.எஸ். அழகிரி எதிரொலித்துள்ளார். 
 நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். விக்ரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானதால், அந்தத் தொகுதியும் நாங்குநேரியும் காலியாக உள்ளன. நாங்குநேரி காங்கிரஸ் சிட்டிங் தொகுதி என்பதால், இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சி ஆர்வம் காட்டிவருகிறது. ஆனால், திமுகவும் அங்கே போட்டியிட விரும்புகிறது. இதுதொடர்பாக அழகிரி, ஸ்டாலினை சந்தித்து பேசியபோதும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் கூறிவிட்டார்.
என்றாலும் நாங்குநேரியில் போட்டியிட திமுக முடிவு செய்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.  காங்கிரஸ் தலைவர்களும் நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் என்று உறுதியாகக் கூறிவருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அக்கட்சியின் நாங்குநேரி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசியதுதான் இப்போது திமுக கூட்டணியில் ஹாட் டாபிக்.
இக்கூட்டத்தில் பேசிய அழகிரி, “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெறும் எதிர்கட்சியாக மட்டுமே இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்  கூட்டணி இல்லாமல் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. காமராஜர் காலத்துடன் காங்கிரசின் வெற்றி சகாப்தம் முடிந்து விட்டது. காமராஜர் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அதனால் வெற்றி சுலபமாக இருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸில் கட்டுகோப்பு இல்லை. பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான காங்கிரஸால் திமுகவோ அல்லது கூட்டணி கட்சிகளோ இன்றி தனித்து நின்று வெற்றிபெற முடியாதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதாவது, நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியால் தனித்து போட்டியிட முடியாதா என்ற குரலில் அவருடைய பேச்சு இருந்தது. இப்போது இந்தப் பேச்சுதான் காங்கிரஸ் கட்சிக்குள்  முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, சென்னை காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசும்போது, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக குறைந்த அளவில் வார்டுகள் ஒதுக்கியதைக் குறிப்பிட்டு, ‘இந்த முறை அதிக வார்டுகளை கேட்டு பெற வேண்டும் அல்லது உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கராத்தே தியாகராஜனின் பேச்சு கட்சிக்கு விரோதமானது என்றும், கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கிறார் என்றும் கூறி அவரை கட்சியிலிருந்து கட்டம் கட்டி நீக்கினார் கே.எஸ். அழகிரி. தற்போது கராத்தே தியாகராஜனின் குரலை கே.எஸ். அழகிரி எதிரொலித்துள்ளதால். அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற பேச்சு காங்கிரஸ்  தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அன்று கராத்தே தியாகராஜன் பேசியதும் இப்போது அழகிரி பேசியதும் ஒன்றுதான் என்று கூறும் காங்கிரஸ் தொண்டர்கள், இந்த விவகாரத்தைக் கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகின்றன.


காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கராத்தே தியாகராஜன் ஆதரவு வட்டம், இது பற்றி கட்சி மேலிடத்துக்கும், ஒரே விஷயத்தைப் பேசிய ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதையும், அன்று நீக்கியவரே அதைப் பற்றி பேசியிருப்பது பற்றியும் புகார் வாசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சத்யமூர்த்தி பவனில் குஷ்தியில் குதிக்க கராத்தே தியாகராஜன் ஆதரவாளர்கள் தயாராகிவருகிறார்கள்.  

click me!