
ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் மாற்று திறனாளி குழந்தைகளை பற்றி அறுவறுக்கத்தக்க முறையில் சைகை செய்துகிண்டலடித்து பேசிய ராதாரவிக்கு, கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவில் எம்எல்ஏவாகவும், நட்சத்திர பேச்சாளராகவும் இருந்த ராதாரவி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 28ம் தேதி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஏற்கனவே திமுகவில் இருந்த ராதாரவி, அதிமுகவுக்கு சென்று பின்னர், திமுகவில் மீண்டும் இணைந்தது, தனது தாய் வீட்டுக்கு திரும்பியதுபோல் உண்ர்ந்ததாக தெரிவித்து இருந்தார்.
இதனிடையே ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான ராதாரவி, கடந்த 1ம் தேதி, ஸ்டாலின் பிறந்தநாளன்று, தங்கசாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ராமதாசையும்,வைகோவையும் கிண்டல் செய்வதாக நினைத்து கொண்டு, மாற்று திறனாளி குழந்தைகளை உடல் சைகைகளால் அறுவறுக்கத்தக்க வகையில் நடித்து காட்டினார்.
இது வலை தளங்களில் வைரலாக பரவி, ராதாரவிக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் ஆதரவாளராக இருந்தாலும், ராதாரவியின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில், இதுபற்றி, கருத்து தெரிவித்துள்ள கனிமொழி, ராதாரவி அவர்கள், மாற்று திறனாளிகளை பற்றி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.