கனிமொழியும், கருணாஸும் சொன்னது உண்மைதானா?: தமிழக அரசு மீது தணியாத கோபத்தில் கஜாவின் பலியாடுகள்!

By manimegalai aFirst Published Nov 18, 2018, 1:06 PM IST
Highlights

கஜா புயலை எதிர்கொள்வதில் தமிழக அரசு சாதுர்யத்துடன் செயல்பட்டதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் பலரும் பாராட்டினர்.

கஜா புயலை எதிர்கொள்வதில் தமிழக அரசு சாதுர்யத்துடன் செயல்பட்டதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் பலரும் பாராட்டினர். ஆனால் தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழி ‘எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.’ என்றும், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வான கருணாஸ் ‘புயல் விஷயத்தில் தமிழக அரசு வெறும் பில்ட் - அப்களை மட்டுமே விட்டது.’ என்று குற்றம்சாட்டினர். 

ஊரே பாராட்டி பேசுகையில் இவர்கள் இருவரும் மாற்றிப் பேசியதை அரசியல் விமர்சகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில், கனிமொழியும் கருணாஸும் பேசியது சரிதானா? என்று நினைக்குமளவுக்கு அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

அதுவும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான, கஜாவை கச்சிதமாக கையாண்டதாக பாராட்டப்பட்ட ஆர்.பி.உதயகுமார் கண் எதிரிலேயே அச்சம்பவங்கள் நடந்திருப்பதுதான் இதை ஆழமாக யோசிக்க வைக்கிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பலி குறைவு, பொருட்சேதமும் குறைவு! என்று சற்றே கர்வப்பட்டது தமிழக அரசு. கஜாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயகுமாரும், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனும் காரில் சென்றனர். 

விழ்ந்தமாவடி எனும் இடத்தில் இவர்களை கண்டதும் சாலை மறியலில் குதித்தனர் மக்கள். ‘வீடு இல்லாம ரெண்டு நாளா நடுத்தெருவுல நிக்குறோம். இதுவரைக்கும் அரசாங்கத்தோட எந்த துறையும் எட்டிப் பார்க்கலை. சாப்பாடு கூட தரலை. நீங்க மட்டும் வெறுங்கைய வீசிட்டு ஏன் வந்தீங்க?’ என்று கொட்டித் தீர்த்தனர். 

இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத உதயகுமாரும், ராதாகிருஷ்ணனும் நெளிந்தனர். அந்த இடத்திலிருந்து உட்பகுதிகளுக்கு கார் செல்ல முடியாத அளவுக்கு இடிபாடுகள் குவிந்து கிடந்தன. இதனால் பைக்கில் ஏறி சென்றனர் இரு வி.ஐ.பி.க்களும். ஆனாலும் போகும் வழியெல்லாம் மக்கள் நின்று கரித்துக் கொட்டினர். ஒரு கட்டத்திற்கு மேல் ஆவேசம் அதிகமானதால் அமைச்சரும், செயலரும் வேதாரண்யம் செல்ல முடியாமல் திரும்பிவிட்டனர். 

அமைச்சர் சென்ற பின், வேதாரண்யம் நோக்கி சென்ற அரசு வாகனங்களை தடுத்த மக்கள், “அமைச்சர் தொகுதி, சாதாரண தொகுதின்னு புயலுக்கு பிரிச்சு பார்க்க தெரியலை. எல்லாவற்றையுமே பிய்ச்சு போட்டுடுச்சு. ஆனா அமைச்சர் ஓ.எஸ்.மணியனோ தன்னோட தொகுதியில் மட்டும் சீரமைப்பு வேலைகளை பண்றார். ஜே.சி.பி, தண்ணீர் லாரி, உணவு வேன் அப்படின்னு எங்களை கடந்து செல்லும் வாகனங்களை, பசியோட வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம். இனியும் இது நீடிச்சா குழந்தைங்க பசியில செத்துடும்.” என்று பொங்கியிருக்கின்றனர். 

கஜாவை அடித்து அமுக்கிவிட்டதாக அரசு கர்வப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த கண்ணீரும், கதறலும் அதிர வைக்கிறது. இந்த வேதனைகளை கேள்விப்பட்ட கனிமொழி ‘இதை நான் சொன்னப்ப என் மேலே கோபப்பட்டாங்க நம்ம கட்சிக்காரங்களே! ஆனா இப்போ புரியுதா?’ என்றிருக்கிறார். உள் குரூரம் இப்படியிருக்க, வெளிப்புற சிறு  காயங்களை மட்டும் பார்த்துவிட்டு எல்லா கட்சிகளும் ஏமாந்தது அவலம்தான்!

click me!