அதிமுக, திமுகவுக்கு இணையாக கமல் போட்ட தேர்தல் பிளான்: நீதி மன்றம் வரை சென்று போராடும் மய்யம்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2020, 4:27 PM IST
Highlights

ரத்து செய்யப்பட்ட கிராமசபை கூட்டங்களை அக்டோபர் 7ம் தேதி நடத்தக் கோரி ஊரக வளர்ச்சி துறை இயக்குனருக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்துவது தொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்ய  நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபை கூட்ட விதிகளின்படியும் ஆண்டுக்கு இரு முறை, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா தொற்றை காரணம் காட்டி, அக்டோபர் 2ம் தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். 

இதை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எந்த முக்கிய காரணமும்  இல்லாமல் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது எனக் கூறப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கிராமசபை கூட்டங்களை அக்டோபர் 7ம் தேதி நடத்தக் கோரி ஊரக வளர்ச்சி துறை இயக்குனருக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது பொது நலம் சார்ந்த விவகாரம் என்பதால், பொது நல மனுவாக தாக்கல் செய்ய மக்கள் நீதி மையத்திற்கு அறிவுறுத்தினார். இந்த ரிட் மனுவை திரும்பப் பெறவும் மக்கள் நீதி மையத்துக்கு நீதிபதி அனுமதியளித்தார். அதாவது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களை கவர வியூகங்களை வகுத்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் கிராம சபை கூட்டங்கள் மூலம் மக்களை நெருங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடத்தப்படுவதாக அறிவித்து விட்டு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக வந்துள்ள தகவல் மக்கள் நீதி மய்யத்திற்குக ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதை நடத்தியே தீர வேண்டும் என்ற முயற்சியில் அந்த இயக்கம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடதக்கது. 

 

click me!