இனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது.. உடனே அவசர சட்டம் இயற்றுங்க.. எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்.!

By vinoth kumarFirst Published Oct 28, 2020, 4:07 PM IST
Highlights

கடந்த சில வாரங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டமும் தொடர்கிறது; தற்கொலையும் தொடர்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவரின் மகன் குமரேசன். தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்த இவர் பெரம்பூர் அருகே தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆன்லைனில் ரம்மி விளையாடி மன அழுத்தத்தில் இருந்த குமரேசன் நீண்ட நாட்களாக தனது சொந்த ஊருக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் அருகில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த குமரேசனின் செல்போனில் அலாரம் அடித்தது கேட்டு நண்பர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது குமரேசன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் சென்னையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது அவரது குடும்பத்திற்கு இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில வாரங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டமும் தொடர்கிறது; தற்கொலையும் தொடர்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் காட்டமாக வலியுறுத்தியுள்ளார். 

click me!