40 தொகுதிகளில் போட்டி! கமல் திடீர் முடிவு! பீதியில் நிர்வாகிகள்!

By sathish kFirst Published Nov 8, 2018, 4:18 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்று கமல் எடுத்துள்ளதாக கூறப்படும் முடிவால் அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை பலரும் பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தனது பிறந்த நாள் அன்று அரசியல் கட்சி துவங்குவதாக கமல் அறிவித்தார். அறிவித்தபடியே மதுரையில் மாநாடு கூட்டி கட்சிப் பெயர், கட்சிக் கொடி ஆகியவற்றை கமல் வெளியிட்டார். துவக்கத்தில் கமல் கட்சிக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதன் பிறகு கமல் பிக்பாஸ் தொலைக்காட்சி தொடருக்கு சென்ற பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு குறைந்தது.

பின்னர் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீட்டு வேலையில் பிசியான கமல் கட்சி செயல்பாடுகளையும் அம்போவென விட்டுச் சென்றுவிட்டதாக நிர்வாகிகள் முனுமுனுத்தனர். இதன் பிறகு விஸ்வரூபம் 2ஐ ரிலீஸ் செய்துவிட்டு வந்த கமல் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தார். மேலும் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளையும் அறிவித்தார். இதன் பிறகு மீண்டும் ஒரு மக்களை சந்திக்கும் பயணம் என்று கூறி கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்தார்.

இடையே தினகரனின் நாடாளுமன்ற கூட்டணி கட்சிகளின் பெயரில் மக்கள் நீதி மய்யம் பெயரும் அடிபட்டது. இதே போல் தி.மு.கவும் கூட கமலை அழைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எல்லாம் எந்த அழைப்பும் கமலுக்கு வரவில்லை. கமலும் கூட்டணி குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தனது பிறந்தநாளை நேற்று கமல் கொண்டாடினார்.

அப்போது 20 தொகுதி இடைத்தேர்தல் வந்தால் அங்கு வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து கமல் பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் களம் இறங்கலாம் என்று கமல் சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி மக்களை சந்தித்தால் கூட நன்றாக இருக்கும் என்று கமல் கூற அருகில் இருந்த நிர்வாகிகள் பீதியில் எச்சில் விழுங்கியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கவே எட்டு மாதங்களுக்கு  மேல் ஆகிவிட்டது. இதில் இடைத்தேர்தல்களுக்கு கூட வேட்பாளர்களை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கினார் வேட்பாளருக்கு எங்கு போவது என்பது தான் நிர்வாகிகளின் பீதிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

click me!