அரசியல்வாதி என ஏற்கும் அளவுக்கு கமலுக்கு பக்குவமில்லை! அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்

First Published Apr 4, 2018, 5:52 PM IST
Highlights
Kamal is not a politician - Minister Jayakumar


நடிகருக்குரிய பண்பு மட்டுமே கமலிடம் உள்ளது என்றும் அரசியல்வாதிக்கான பண்பு கிடையாது என்றும் அரசியல்வாதி என ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு கமல் ஹாசனுக்கு பக்குவம் கிடையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி பிரச்சனை பற்றி கமல் ஹாசனுக்கு என்ன என்ன தெரியும்? அவர் நடிப்பில் சிறந்து விளங்கலாம். ஆனால், அரசியலில் அது முடியாது. கமல்ஹாசனிடம் நடிகருக்குரிய பண்பு மட்டுமே உள்ளது. அரசியல்வாதிக்கான பண்பு கிடையாது. அரசியல்வாதியென ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு கமல் ஹாசனுக்கு பக்குவம் கிடையாது என்றார்.

காவிரி விவகாரத்திற்காக அதிமுக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தது. அதில் மக்களும் பெரும்பாலான இடங்களில் கலந்துகொண்டனர். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்தவோ, போராட்டம் நடத்தவோ கமல்ஹாசனுக்கு தைரியமில்லை. ட்விட்டரில் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் ரயிலில் போவது சாதனையா? நாங்கள் பல ஆண்டுகளாக ரயிலில்தான் சென்று கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் அவர் சாதனையாக சொல்வதை தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். அவருக்குப் பதில் சொல்வதற்கு எங்களுக்கு நேரம் இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் மத நல்லிணக்க பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுத்ததற்காக நாட்டைவிட்டு ஓடிவிடுவேன் என்று சொன்னவர் கமல்ஹாசன். மக்கள் அதனை சிந்திக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்தும் கபட நாடகம். காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது திமுகதான். காவிரிக்காக தங்களது குடும்பத்தினரால் நடத்தப்படும் வணிக வளாகங்கள், மதுபான ஆலைகளை ஸ்டாலின் மூடலாமே என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

click me!