
தமிழகத்தில் இந்துத்வ சக்திகள் மெதுவாக ஊடுருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனும் டைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு “கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். இதுவரை வாதங்களால் செய்த விஷயங்கள் முடியாமல் போகவே இப்போது வன்முறையால் நிகழ்த்த துவங்கிவிட்டனர். ‘எங்கே ஓர் இந்து தீவிரவாதியை காட்டுங்கள்’ என்கிற சவாலை இனி அவர்களால் கூற முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவி இருக்கிறது. வலிமையே வெல்லும் எனும் நம்பிக்கை காட்டு மிராண்டிகள் ஆக்கிவிடும்.
சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக தமிழகம் மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை. இன்றைய நிலையில் கேரளா முன்னுதாரணமாக இருக்கிறது.” என்று நெருப்பாய் கூறியிருந்தார்.
கமலின் இந்த பேச்சுக்கு பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து மிக கடுமையான கண்டனங்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி.யின் மேலிட செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ் “இந்திய மக்களை, குறிப்பாக இந்து மதத்தினரை சிறுமைப்படுத்தி பேசும் போக்கை சோனியாவும், ராகுலும் வழக்கமாக வைத்திருந்தனர். அதை ‘இந்து தீவிரவாதம்’ எனும் தலைப்புடன் அதை ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே போன்ற மாஜி காங் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் கச்சிதமாக பதிவு செய்தனர்.
இப்போது கமல் பேசுவதை பார்த்தால் அவரையும் லஷ்கர் - இ- தொய்பா நிறுவனர், ஹபீஸ் சயீதி, சிதம்பரம் போன்றோரின் பட்டியலில் தாராளமாய் சேர்த்துவிடலாம். காங்கிரஸ்காரர் போலவே பேசுகிறார் கமல். இவர்களெல்லாம் இப்படி பேசினால் பாகிஸ்தானின் கைதான் ஓங்கும்.
கேரள கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ள கமல், அங்கு நடக்கும் சிவப்பு தீவிரவாதத்தை பார்க்காதவர் போல் கண்ணை மூடி, குறுகிய கண்ணோட்டத்துடன் பேசுகிறார்.
கமல் போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதியை தமிழக மக்கள் நிராகரிப்பர்.” என்று அடித்து துவம்சம் செய்துள்ளார் கமலின் கருத்தை.
ஆர்.எஸ்.எஸ். தலைவரான சின்ஹா “அரசியல் லாபத்திற்காக இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசும் கமல், அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அரசியலுக்கு வருவதற்காக கமல் தேர்ந்தெடுத்திருக்கும் வழி அவருக்கு அவரே சவக்குழி வெட்டுவது போல் உள்ளது.” என்று கிழித்தெடுத்துள்ளார்.
ஊழலை வளர்க்கும் அரசியலையும், மக்கள் நலன் சாரா அரசாட்சியையும் எதிர்க்க வந்த தமிழனாக துவக்கத்தில் பார்க்கப்பட்டார் கமல். ஆனால் இப்போது அவர் தன்னை இந்துக்களின் எதிரியாக பிம்பப்படுத்துவது தமிழகத்திலேயே அவர் மீதான மரியாதையை அசைத்துப் பார்க்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.
- விஷ்ணுபிரியா