
நடிகர் கமலஹாசன் இன்று தான் புதிதாக தொடங்கும் கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை மதுரையில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். இன்று ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருக்கிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
தனது கட்சிப் பெயர், கொடி, கொள்கை உள்ளிட்டவற்றை தனது ரசிகர்கள் முன்பு இன்று அறிவிக்கிறார். பின்னர் இன்று மாலை 6.30 மணிக்கு மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கமல் உரையாற்றுகிறார்.
இதற்கிடையே, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இன்று துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். இன்று மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிழகழ்ச்சிகளில் பங்கேற்பதாற்காக விமானம் மூலம் மதுரை வந்த கமல்ஹாசன், சாலை வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
இன்று காலை 8.45 மணிக்கு கமல், அப்துல் கலாம் இல்லத்திற்கும், அவரது நினைவிடத்துக்கும் சென்று வணங்கி புதிய கட்சியை தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து ராமநாதபுரம்,பரமக்குடி,மானாமதுரை போன்ற இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதையொட்டி மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.