மு.க. ஸ்டாலின் மீது உலக நாயகனுக்கு கோபம் ஏன்..? அதிரடி பின்னணி

By Asianet TamilFirst Published Feb 21, 2019, 1:59 PM IST
Highlights

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸார் மூலம் 3 தொகுதிகளைக் கேட்டு மக்கள் நீதி மய்யம் தூதுவிட்டதாகவும், அதற்கு திமுக தரப்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகள் தருவதாக சொன்னதாக கூறப்படுகிறது. திமுகவின் இந்தப் பதிலைக் கேட்டு கோபமடைந்த கமல், அதன் பிறகே திமுக மீது தாக்கி பேசியதாக அக்கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.க. ஸ்டாலின் - கமல்ஹாசன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், திடீரென 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த கமல்ஹாசன், “அவசர கைகுலுக்களில் எங்கள் கை அசுத்தமாகிவிடக் கூடாது” என்று திமுகவை ஊழல் கட்சியாக சித்தரித்து பேட்டியளித்தார். 

இதற்கு திமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலினை கடுமையாகத் தாக்கி பேசினார். ‘அரசியலில் சிறுவனாகிய என்னைப் பார்த்து கிராம சபை கூட்டம் நடத்தம் வெட்கம் இல்லையா’ என்று கேட்ட கமல், ‘சட்டசபையிலிருந்து சட்டையைக் கிழித்துக்கொண்டு வர மாட்டேன்’ என்று ஸ்டாலினை தாக்கி பேசினார். 

திமுக மீதும் ஸ்டாலின் மீதும் கமல் தாக்கிப் பேசுவது கூட்டணி கைவிட்டு போனதுதான் காரணம் என்று பொதுவெளியில் பேசப்பட்டது. ஆனால், அதையும் கமல்ஹாசன் மறுத்திருந்தார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமலை சேர்க்க மறுத்ததே இந்த விமர்சனத்துக்குக் காரணம் என்று மக்கள் நீதி மய்யம் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. 

click me!