
சினிமாவில் இருதுருவங்களாக திகழ்ந்த ரஜினியும் கமலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் களமிறங்குகின்றனர். ஆனால் ரஜினிக்கு முன்னதாக கட்சியின் பெயரை அறிவித்து தீவிர அரசியலை தொடங்குகிறார் கமல்.
நாளை அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல். அதற்காக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார்.
அதன்பிறகு அரசியலில் மூத்தவர் என்ற முறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சென்று கமல் சந்தித்தார். அரசியல் கட்சி தொடங்கும் கமல், விஜயகாந்திடமும் வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கமலை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்தீர்கள்.. ரஜினி, சீமானையும் சந்தித்துவிட்டீர்கள்.. ஆனால் அதிமுகவில் யாரையும் சந்திக்கவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், இந்த ஆட்சியே சரியில்லை. ஊழலில் திளைக்கிறார்கள் என ஏற்கனவே விமர்சித்துவிட்டேன். ஆட்சி மாற்றம் வேண்டும் என்றுதான் அரசியலுக்கே வருகிறோம். அப்படி இருக்கையில் அவர்களை சந்திக்க முடியாது.. சந்திக்க வேண்டிய தேவையும் இல்லை என தெரிவித்துவிட்டார்.