ஒரு குழந்தை படிப்பை கைவிட்டால், அதற்கு எடப்பாடி அரசுதான் காரணம்... கமல்ஹாசன் பொளேர்!

By Asianet TamilFirst Published Sep 18, 2019, 10:18 PM IST
Highlights

ஜாதி, மதங்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட மதிப்பெண்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகம். இதனால் ஒரு குழந்தை சமூகத்தில் நாம் வாழ தகுதியே இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும். 

ஏதாவது ஒரு குழந்தை தனது பள்ளிப்படிப்பை கைவிட்டால் அதற்கு மாநில அரசு அமல்படுத்தியிருக்கும் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமே முக்கிய காரணம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தமிழகப் பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு  தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.


அந்த வீடியோவில், “ஒரு தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ அதைவிடக் கொடுமை 10 வயது மாணவன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையைக் கட்டிவைப்பது. இந்தக் கல்வி திட்டம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையே கற்றுக்கொடுக்கும். இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகரிக்காது. மாறாக, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் தேர்வு பயம்தான் அதிகரிக்கும்.

 
ஜாதி, மதங்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட மதிப்பெண்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகம். இதனால் ஒரு குழந்தை சமூகத்தில் நாம் வாழ தகுதியே இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும். இனி ஏதாவது ஒரு குழந்தை தனது பள்ளிப்படிப்பை கைவிட்டால் அதற்கு மாநில அரசு அமல்படுத்தியிருக்கும் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமே முக்கிய காரணம். பள்ளி குழந்தைகளுக்கு எள்ளளவும் பயன்படாத இந்தத் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. இத்திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது” என்று வீடியோவில் கமல் பேசியுள்ளார்.

click me!