மதுரையில் ரூ.10-க்கு கலைஞர் குடிநீர் பாட்டில்கள்.. அம்மா குடிநீருக்கு மாற்றா?

By vinoth kumarFirst Published Aug 4, 2021, 11:52 AM IST
Highlights

மதுரையில் 10 ரூபாய்க்கு கலைஞர் குடிநீர் விற்பனை செய்யப்படும் நிலையில் அம்மா குடிநீருக்கு மாற்றா? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. 

மதுரையில் 10 ரூபாய்க்கு கலைஞர் குடிநீர் விற்பனை செய்யப்படும் நிலையில் அம்மா குடிநீருக்கு மாற்றா? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. 

தமிழகத்தில் ஏழை, எளியவர்களுக்கும், பஸ் போக்குவரத்துப் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கும் குறைந்த விலையில் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 2013-ல் தமிழகம் முழுவதும் `அம்மா குடிநீர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதே ஆண்டிலேயே பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் `அம்மா குடிநீர்' திட்டம் நடைமுறைக்கு வந்தது. 

முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், சுமார் 10.5 கோடி மதிப்பீட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக அரசு `அம்மா குடிநீர்' திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்காததால் உற்பத்தி செய்யப்படும் குடிநீரின் அளவு குறைந்துகொண்டே வந்தது. இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால், பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அம்மா குடிநீர் உற்பத்தி ஆலையும் மூடப்பட்டு தமிழகம் முழுவதிலும் அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. 

இந்நிலையில், அந்த திட்டத்தை தற்போது கையிலெடுக்க புதிதாக அமைந்துள்ள திமுக அரசின் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.  விரைவில் கலைஞர் குடிநீர் திட்டம் என்ற பெயரில் மாற்றப்பட்டு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை மாநகரில் உள்ள சில கடைகளில் கலைஞர் குடிநீர் என்ற பெயரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படம் பொறுத்தி 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோன்று பல்வேறு கடைகளிலும் கலைூர் குடியீர் மினரல் வாட்டார் என விளம்பரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து குடியீர் பாட்டிலில் இடம் பெற்றிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது முதல்முறையாக விளம்பரத்திற்காக விற்பனை வழங்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் அங்கிகாரத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!