
பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் பாலியல் வன்கொடுமை கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக கதிர் காமு தற்போது போட்டியிடுகிறார். இவர் மீது பாலியல் புகார் உள்ளதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டாக்டர் கதிர்காமு மீது பெரியகுளத்தைச் சேர்ந்த 37 வயது திருமணமான பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி பெரியகுளத்தில் உள்ள கதிர்காமு மருத்துவமனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் வீடியோ படம் எடுத்து அதை வைத்து தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அப்பெண்ணின் புகாரின்பேரில் டாக்டர் கதிர்காமு மீது ஐபிசி 417 (ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம்), 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கண்ட பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் கதிர்காமு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே கதிர்காமு சம்பந்தப்பட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் மருத்துவமனையில் நடந்ததாகக் கூறுகிறார். ஆனால், அந்த இடம் வீடு போன்ற அமைப்பில் உள்ளது.
தன்னை வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக அந்தப்பெண் கூறுகிறார். ஆனால் அந்த வீடியோ சமபவம் நடந்த அறைக்குள் இருந்து எடுக்கப்படவில்லை. அறைக்கு வெளியில் இருந்து கதவின் சாவி துவாரத்தின் வழியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சழபந்தப்பட்ட பெண் தரப்பினரோ அல்லது கதிர் காமுவின் எதிராளிகளோ எடுத்திருக்க வேண்டும். அத்தோடு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுவது 2015ம் ஆண்டு. அப்போது, அந்தப் பெண் தரப்பினர் இது குறித்து காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர்.
அப்போதே அந்தப் பெண்ணிற்கு கணிசமான தொகை வழங்கப்பட்டு பிரச்னை பேசி தீர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் விருப்பத்தின் பேரிலேயே கதிர் காமு பாலியல் உறவு கொண்டிருப்பதும் அப்போதே தெரிய வந்ததால் பிரச்னை தீர்க்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த வீடியோவை வெளியிட்டும், வழக்குப்பதிவு செய்தும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்குடன் அந்தப்பெண்ணை தூண்டி விட்டுள்ளதாக கூறுகின்றனர் அமமுகவினர். அரசியலுக்காகவே நடக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் ஓ.பி.எஸ்., ஓ.பி.எஸ் மகன்., ஓ.பி.எஸ் தம்பி ஆகியோர்தான் காரணம் என்கிறார்கள் அமமுகவினர்.