இலவசத்தால் நாடே கெட்டழிந்து போச்சு சொன்ன மோடி.. குஜராத்தில் இலவச சிலிண்டர் அறிவிக்கலாமா? கி.வீரமணி..!

By vinoth kumar  |  First Published Oct 21, 2022, 8:07 AM IST

இலவசங்களால்தான் நாடே கெட்டழிந்துவிட்டது என்று பல மேடைகளில் முழக்கமிட்டார் பா.ஜ.க.வின் வாக்கு வங்கிக்குப் பிரதானமான பிரதமர் மோடி - சில மாதங்களுக்கு முன்பு. இதனை ஒரு ‘‘சமிக்ஞையாக’’ எடுத்துக்கொண்டு பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடுத்தார்.


குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல், தேர்தல் கமிஷன் மவுனம் காக்கிறது போலும் என்பது எல்லோருக்கும் பகிரங்கமாகவே புரிகிறது என கி.வீரமணி கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இலவசங்களால்தான் நாடே கெட்டழிந்துவிட்டது என்று பல மேடைகளில் முழக்கமிட்டார் பா.ஜ.க.வின் வாக்கு வங்கிக்குப் பிரதானமான பிரதமர் மோடி - சில மாதங்களுக்கு முன்பு. இதனை ஒரு ‘‘சமிக்ஞையாக’’ எடுத்துக்கொண்டு பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடுத்தார்! குஜராத் தேர்தல், இமாச்சலப் பிரதேச தேர்தல் அறிவிப்பில்கூட அரசியல்! ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பொறுப்பில் இருந்தபோது இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வழக்கும் நடைபெற்று இன்னும் நிலுவையில் உள்ளது! இமாச்சலப்பிரதேசம், குஜராத் ஆகிய இரண்டு மாநில சட்டமன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து அடுத்த தேர்தல் அறிவிப்பு, இமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் வந்தது! முந்தைய நடைமுறைகளில் இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்துத்தானே ஒரே நேரத்தில் தேர்தல்  நடத்தும் தேதி அறிவிப்பு வந்தது; இப்போது ஏன் குஜராத் மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்புக்குத் தாமதம்? மேனாள் தலைமைத் தேர்தல் அதிகாரியான எஸ்.ஒய்.குரேஷி போன்றவர்களேகூட அறிக்கை விட்டனர்.

Tap to resize

Latest Videos

நாம் கடந்த 15.10.2022 அன்று வெளியிட்ட அறிக்கையில் இதனைச் சுட்டிக்காட்டினோம். ‘‘குஜராத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி என்பது சந்தேகத்திற்கிடமான நிலையில், அங்கே சில பல ‘‘வித்தைகள்’’ தேவைப்படுகின்றன போலும்‘’ என்ற நமது ஊகம் இப்போது உண்மையாகிவிட்டது.  ‘‘இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் - இல்லத்தரசிகளுக்கு’’  என்ற திடீர் அறிவிப்பு வருகிறது! இலவசத்தை எதிர்த்தவர்கள், இப்பொழுது சமையல் எரிவாயு இலவசம் என்று அறிவிப்பது ஏன்? கடந்த சில வாரங்களாக குஜராத்தில் எண்ணெய் விலை ஏறவே இல்லை. வழமையாக தேர்தல் முடியும்வரை, இது ஏறாது; முடிந்தவுடன் ‘பரமபத பாம்பு’ நுகர்வோரைக் கடித்து விலைவாசிகள் குறிப்பாக பெட்ரோலியப் பொருள்கள் விலை ஏறும் வாடிக்கை நாடறிந்த ஒன்றுதானே!

தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், இதுமாதிரி சலுகை - இலவசங்கள், அறிவிப்புகள் என அறிவிப்புச் செய்வது சட்ட விரோதமாகிவிடும் என்பதால், அதற்காகவே குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல், தேர்தல் கமிஷன் மவுனம் காக்கிறது போலும் என்பது எல்லோருக்கும் பகிரங்கமாகவே புரிகிறது! முன்பு பேசியதற்கு நேர்மாறான செயல்பாடு பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.சுக்குக் கைவந்த கலை - ஏமாற்று வித்தைகள்தான்! ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு திடீர் என்று ஜாதி, வருணம் மீது கண்டனக் குரல் எழுப்பும் அக்கறை முளைத்து விடுகிறது.

பெண்கள்பால் பரிவும், உரிமையும் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட நாள்முதல், முன்பு எப்போதும் இல்லாது ஓர் அம்மணியைப் பக்கத்தில் அமர்த்திப் பெண்கள் மீதுள்ள ‘விசேஷ அக்கறையை’ வெளிச்சம் போட்டுக் காட்டும் வித்தை! வேளாண் சட்டங்களைத் திடீரென்று ‘வாபஸ்’ பெற்றதன் பின்னணி என்ன? மூன்று வேளாண்மைச் சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி, அமல்படுத்த முனைந்த நிலையில், ஓராண்டாக வெயிலிலும், மழையிலும் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தைத் தலைநகர் டில்லியில் நடத்திய விவசாயிகளை நேரில் சென்று பார்த்து, நிலைமையை விளக்க விரும்பாது மறுத்த பிரதமர், திடீரென பஞ்சாப் தேர்தலுக்கு முன்னர் மூன்று சட்டங்களையும் ‘வாபஸ்’ பெறுவதாக அறிவித்தார்.

இங்கே தமிழ்நாட்டில் உள்ள அரைவேக்காடு பா.ஜ.க. தலைவர்கூட ‘மூன்று சட்டங்களில்’ ‘‘ஒரு வரி எழுத்தைக்கூட மாற்ற முடியாது’’ என்று ‘‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசி’’யாய் வாய்க் கிழிய கத்தியவர் நிலையோ, மூக்கறுபட்ட முத்தன் கதி ஆகியது! குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடியின் நிலைப்பாடும் - இப்பொழுது தலைகீழ் மாற்றமும் ஏன்? குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, முந்தைய அய்க்கிய முன்னணி அரசு அறிவித்த ஜி.எஸ்.டி.,பற்றி, ‘‘என் பிணத்தின்மீதுதான் ஜி.எஸ்.டி., வரி நுழைய முடியும்‘’ என்று வீர முழக்கமிட்டவர் அன்றைய குஜராத் முதலமைச்சர், இன்றைய பிரதமர் மோடி! நீட்டையும் எதிர்த்தவர்தான்! இன்று என்ன நிலை? மக்கள் மறந்துவிட மாட்டார்கள்! அன்று மாநில உரிமைகளைப்பற்றிப் பேசியவர், இன்று, மாநிலங்களின் உரிமையைப்பற்றிய அவரின் நிலைப்பாடு என்ன? கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சி - ‘Co-operative Federation’ என்று எங்கே உள்ளது? எதில் உள்ளது? வாக்காளர்களே, ஒரு கணம் சிந்திப்பீர்! புரிந்துகொள்வீர்!! என வீரமணி கூறியுள்ளார்.

click me!