பா.ஜ.க. அரசு, மாநில அரசினைக்கூட கலந்து ஆலோசிக்காமல் ‘தானடித்த மூப்பாகவே’ நிலக்கரி அமைச்சரகம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது - வேதனையானது மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம்
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நெய்வேலியில் ஒன்றிய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கு அப்பகுதி விவசாய மக்கள் வரவேற்று, தங்களது நிலத்தை - உரிய நட்ட ஈடு இல்லை என்பதை அறிந்தும்கூட மனமுவந்து தர முன்வந்ததற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு அப்பகுதி விவசாய மக்கள் மனமுவந்து ஆதரவு கொடுத்தது ஏன்?
1. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்; தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும்.
2. நிலம் கொடுத்த கிராம மக்களின் பிள்ளைகளின் வேலை வாய்ப்புக்கும் அப்போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
காலப் போக்கில், இந்த வாக்குறுதிகளும், இவர்கள் நாக்கில் தடவப்பட்ட தேனும், கற்பனைகளாயின! ‘‘அசாமில் உள்ளவற்றிற்கு, உரிமத் தொகை அளிப்பதுபோல் நரிமணம் பெட்ரோலுக்கும், நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதற்குமான ‘‘ராயல்டி’’ தொகையை தமிழ்நாடு அரசுக்குக் கொடுக்கவேண்டுமென்ற திராவிடர் கழகத்தின் இடையறாத போராட்டம், தமிழ்நாடு முழுவதும் பேரணி, சுவரெழுத்துகள் - மக்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்‘’ காரணமாக அதில் வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசு அதனை ஒன்றிய அரசிடமிருந்து, அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று வருகிறது. அது ஒன்றைத் தவிர, மீண்டும் வளர்ச்சி, இரண்டாம் சுரங்கம், மூன்றாம் சுரங்கம் என்று கூறி, பல்லாயிரக்கணக்கில் நமது ஏழை விவசாயிகளின் நிலங்களை நிறுவனம் பெறத் துடிக்கிறது!
பாலைவனமாகும் தஞ்சை பகுதி
தமிழ்நாட்டிற்குப் பதில் வடமாநிலங்கள்தான் பயன்பெறுகின்றன. பல யூனிட்டுகள் அங்கே எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மீண்டும் புதுப்புது சுரங்கம் என்பது ‘யார் தலையில் மிளகாய் அரைக்க’ என்பதே தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடற்ற உரிமைக் கேள்விக் குரலாகும்! ‘‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’’ என்ற கிராமியப் பழமொழிபோல், காவிரி டெல்டா பகுதியையும் ஆக்கிரமித்து, இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாநில அரசினைக்கூட கலந்து ஆலோசிக்காமல் ‘தானடித்த மூப்பாகவே’ நிலக்கரி அமைச்சரகம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது - வேதனையானது மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும்!
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதா? இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த 3 பகுதிகள் இடம்பெற்றுள்ளன!
1. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி.
2. கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்குப் பகுதி.
3. தஞ்சை மாவட்டம் உரத்தநாடு பகுதியில் உள்ள வடசேரி - ஆகிய பகுதிகள்.
‘‘ஒட்டகம்‘’ உள்ளே நுழைய தலைநீட்டுகிறது; இந்த நெய்வேலி நிறுவனத்தையே லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனம் என்ற நிலையை மாற்றி, அதை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் மறைமுகத் திட்டமும் இதில் பதுங்கியிருக்கும் நிலையில், இதன் விரிவாக்கம் எதை நோக்கிச் செல்லுகிறது? யாருக்குப் பயன்பட, இந்த விவசாயிகளின் வயிற்றில் அடித்து, வாரிசுதாரர்களின் பங்கீட்டில் ஒரு கொடுமை தீராத நிலையில், மேலும் காவிரி டெல்டா விவசயிகளை இப்படிக் கொடுமைப்படுத்திடுவது எவ்வகையில் நியாயம்? இதுதான் குஜராத் மாடலா? வளர்ச்சி மாடலா? பயிர் விளைச்சல் நிலங்களை பாலைவனமாக்குவதா? இது ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதி - அறிவிப்புகளுக்கு நேர் முரணானது என்பதைச் சுட்டிக்காட்டி,
போராட்டத்திற்கு அழைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளார்! தஞ்சையில் ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்! இத்திட்டம் ‘அறவே கைவிடப்படல்’ அவசரம், அவசியம்! இதனை வலியுறுத்தி வருகிற 8.4.2023 மாலை 4 மணியளவில் தஞ்சையில் எனது தலைமையில் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது! இதில், திராவிடர் கழகம் மட்டுமல்லாமல், கட்சி வேறுபாடின்றி, அனைத்து டெல்டா பகுதி விவசாயிகளும், கட்சிகளும், பொது அமைப்பாளர்களும் கலந்துகொள்ளுமாறு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்
கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!