சில வாரங்களில் கொரோனா வார்டுகள் நிரம்பி வழியலாம்..! எச்சரிக்கும் காங்கிரஸ் தலைவர்..!

By Manikandan S R SFirst Published Mar 27, 2020, 11:37 AM IST
Highlights

நமது நாட்டின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இன்னும் சில வாரங்களில் கொரோனா சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிய வாய்ப்புகள் உள்ளன. எனவே, கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாகி வரும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதுவரையில் 724 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 17 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கும் வசதியை உண்டாக்கவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் திடீரென அதிகரித்தால், இதனை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு 70 மருத்துவமனைகளில் மட்டுமே படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், சீனாவில் 420, இத்தாலியில் 340 என்ற அளவில் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இன்னும் சில வாரங்களில் கொரோனா சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிய வாய்ப்புகள் உள்ளன. எனவே, கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி துறைகளில் பணியாற்றும் ஊழியர்களையும் இந்த பணிக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டாக்டர், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மிக,மிக முக்கியமானதாகும். அவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில், பாதுகாப்பு உடை, முகக்கவசம், கையுறை, அங்கிகள் மற்றும் கண்களை பாதுகாக்கும் கவசம் ஆகியவற்றை வழங்க வேண்டும். கொரோனா கிருமி பரவல் சங்கிலியை உடைப்பதன் மூலம், இந்த நோயை எதிர்கொண்டு நம்மால் வெற்றிபெற முடியும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!