’ஸ்டாலின் என்னை பிரதமாராக்கிடுவார்..’ துர்கா உதவியை நாடி கனவோடு காத்திருக்கும் முதல்வர்..!

By Thiraviaraj RMFirst Published May 17, 2019, 12:27 PM IST
Highlights

சந்திரசேகர ராவை ஐதராபாத்துக்கு சென்று சந்தித்தால் அது காங்கிரஸ் கூட்டணியுடனான நட்பை சிதைத்து விடும் என கருதுகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், சந்திரசேகரராவின் கணக்கு வேறு. 

1996ல் இந்திய பிரதமர் யார் என்ற பெரிய குழப்பம் நிலவி வந்தது. அப்போது பல பெயர்கள் முன்மொழியப்பட்ட போது, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மஜதவின் தலைவராக இருந்த தேவகவுடாவின் பெயரை முன்மொழிந்தார். அதேபோல் தேவகவுடா பிரதமர் ஆனார். அதேபோல் தற்போது ஸ்டாலின் தனது பெயரை பிரதமர் பதவிக்கு முன் மொழிவார் என உறுதியாக நம்புகிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

 

ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன், ஸ்டாலினை சந்தித்து சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். அப்போது அவருக்கு, ஸ்டாலின் வீட்டில், தடபுடலாக மதிய விருந்து கொடுக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை மாலை ஸ்டாலின் வீட்டுக்கு வந்த சந்திரசேகர ராவுக்கு சூடான மசால் வடையும், டீயும் கொடுத்து உபசரித்து இருக்கிறார்கள். ரசித்து சாப்பிட்ட சந்திரசேகர ராவ், ஸ்டாலின் மனைவி துர்காவிடம், 'நீங்களும், ஸ்டாலினுடன் குடும்பத்தோடு வந்து ஐதராபாத்தில் உள்ள எங்க வீட்டுக்கு விருந்துக்கு கட்டாயம் வரணும்’ என வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறார். 

ஸ்டாலினும், 'வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் வருகிறோம்’ என உறுதி கொடுத்திருக்கிறார். அப்போது துர்கா ஸ்டாலின் கடவுள் பக்தி மிகுந்தவர் என்பதை தெரிந்து கொண்டு  தெலங்கானாவில் உள்ள சில பிரசித்தி பெற்ற கோயில்களையும் கூறி செண்டிமெண்டாக அழைப்பு விடுத்திருக்கிறார் சந்திரசேகர ராவ். ஆனால், துர்கா ஐதராபாத் சென்று கோயிகளில் தரிசனம் செய்து விட்டு சந்திரசேகரராவ் வீட்டில் விருந்து உண்ண விருப்பப்பட்டாலும் மு.க.ஸ்டாலின் அதனை விரும்பவில்லை. காரணம், இப்போது சந்திரசேகர ராவ் தன்னை சென்னையில் வந்து சந்தித்ததை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்பதை உணர்ந்து விட்டார் மு.க.ஸ்டாலின். 

இந்நிலையில், மீண்டும் சந்திரசேகர ராவை ஐதராபாத்துக்கு சென்று சந்தித்தால் அது காங்கிரஸ் கூட்டணியுடனான நட்பை சிதைத்து விடும் என கருதுகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், சந்திரசேகரராவின் கணக்கு வேறு. அடிக்கடி சந்திப்பை ஏற்படுத்தினால் ஸ்டாலின் மனம் மாறி தன்னை பிரதமர் வேட்பாளராக முன் மொழிவார் எனக் கருதுவதால், அவர் மீண்டும் விரைவில் ஸ்டாலினை சந்திக்க வரலாம் என்கிற கலக்கத்தில் இருக்கிறது திமுக வட்டாரம். 
 

click me!