இந்த 11 மாவட்டங்களுக்கு மட்டும் ஜூன் மாத கட்டணம்.. மின்சார வாரியம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2021, 9:35 AM IST
Highlights

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தொழிற்சாலை மின் நுகர்வோரின் கட்டணத்தைக் கணக்கெடுக்க மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தொழிற்சாலை மின் நுகர்வோரின் கட்டணத்தைக் கணக்கெடுக்க மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொழிற்சாலை மின் நுகர்வோரின் கட்டணத்தைக் கணக்கீடு செய்து, அதற்கான தொகையை வசூலிக்க மின்சார வாரியம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையைப் பொருத்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, வகை 1ன் கீழ் இடம்பெற்றுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படவில்லை என்றும், எனவே, இந்த மாவட்டங்களில் பிஎம்சி எனப்படும் முந்தைய மாத கணக்கீட்டு முறையைப் பின்பற்றி மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து தற்போது இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து தொழிற்சாலை மற்றும் தாழ்வழுத்த வணிக மின் நுகர்வோருக்கு, ஜூன் மாத கட்டணம் கணக்கீடு செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பகிர்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இதுவரை மின் கட்டணம் செலுத்தாத தொழிற்சாலை நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கான மின் பயன்பாட்டு கட்டணத்தை சரியான முறையில் கணக்கீடு செய்து, அந்தத் தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளர் உள்ளிட்டோருக்கு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 

click me!