
18 அதிமுக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் 3-வது நீதிபதியின் தீர்ப்பை கேட்க இரண்டு நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 19 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர். அவர்களில் ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பிவிட, மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள்
தங்க தமிழ்ச்செல்வன் - ஆண்டிபட்டி தொகுதி, ஆர்.முருகன் - அரூர், மாரியப்பன் கென்னடி - மானாமதுரை, கதிர்காமு - பெரியகுளம், ஜெயந்தி பத்மநாபன் - குடியாத்தம், பழனியப்பன் - பாப்பிரெட்டி பட்டி, செந்தில் பாலாஜி - அரவக்குறிச்சி, எஸ். முத்தையா - பரமக்குடி, வெற்றிவேல் - பெரம்பூர், என்.ஜி.பார்த்திபன் - சோளிங்கர், கோதண்டபாணி - திருப்போரூர், ஏழுமலை - பூந்தமல்லி, ரெங்கசாமி - தஞ்சாவூர், தங்கதுரை - நிலக்கோட்டை, ஆர்.பாலசுப்பிரமணி - ஆம்பூர், எஸ்.ஜி.சுப்ரமணியன் - சாத்தூர், ஆர்.சுந்தரராஜ் - ஒட்டப்பிடாரம், கே.உமா மகேஸ்வரி - விளாத்திகுளம் ஆகிய 18 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை முடிந்து கடந்த ஜனவரி 23ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி பதிப்பில் நாம் குறிப்பிட்டதுபோலவே மதுரை அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்த நீதிபதி சுந்தர் இன்று, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகிறார். இதையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் இணைந்து விசாரித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முதலில் இன்று காலை 10.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் பரவியது.
பின் நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் பணிப் பட்டியலில், இன்று மதியம் 1 மணிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வாய்மொழி வாதங்கள், எழுத்துபூர்வ வாதங்கள், விசாரணைகள் என எல்லாமே ஜனவரி 23ஆம் தேதியோடு முடிந்துவிட்ட நிலையில் இன்று மதியம் இவ்வழக்கின் தீர்ப்பு மட்டுமே வழங்கப்படும். எனவே, இன்று காலை முதலே சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பான சூழலில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார்.
ஆனால், நீதிபதி சுந்தர், தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார். ஒரே அமர்வில் உள்ள இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார். இதனால் 3-வது நீதிபதியின் தீர்ப்பை கேட்க இரண்டு நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்தக்கூடாது என தீர்ப்பில் கூறியுள்ளனர்.