
தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 19 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர். அவர்களில் ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பிவிட, மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த பரிந்துரையின் பேரில் கடந்த வருடம் செப்டம்பர் 18ஆம் தேதி சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை முடிந்து கடந்த ஜனவரி 23ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி பதிப்பில் நாம் குறிப்பிட்டதுபோலவே மதுரை அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்த நீதிபதி சுந்தர் இன்று, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகிறார். இதையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் இணைந்து விசாரித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முதலில் இன்று காலை 10.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் பரவியது.
பின் நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் பணிப் பட்டியலில், இன்று மதியம் 1 மணிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வாய்மொழி வாதங்கள், எழுத்துபூர்வ வாதங்கள், விசாரணைகள் என எல்லாமே ஜனவரி 23ஆம் தேதியோடு முடிந்துவிட்ட நிலையில் இன்று மதியம் இவ்வழக்கின் தீர்ப்பு மட்டுமே வழங்கப்படும். எனவே, இன்று காலை முதலே சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்பார்த்து அதிமுக மட்டுமல்ல, திமுக மட்டுமல்ல அனைத்துத் தரப்பு மக்களும் காத்திருக்கிறார்கள்.
இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட இருக்கிறது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தால் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளிப்பத்தால் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை உருவாகும். இன்னும் சற்று நேரத்தில் ஆட்சி நீடிக்குமா? அல்லது கலையுமா? என்ற நிலையில் தற்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் பழனிசாமி அவசர அவசரமாக ஆலோசனை நடத்தி வாருகிறார்.