2000 ரூபாய் தருவாங்க வாங்கிட்டு போங்க... பத்திரிகையாளரை அசிங்கப்படுத்திய அண்ணாமலை!!

By Narendran SFirst Published May 27, 2022, 10:05 PM IST
Highlights

பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்தியுள்ளது. 

பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன் தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அதை காது கொடுத்து கேட்காமல், அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு 2000 ரூபாய் நிச்சயம் என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

 

அண்ணாமலையின், இந்த அநாகரிகமான வார்த்தையை அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்தனர். மேலும் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வாயடைக்கச் செய்யும் வகையில், அவர்களை இழிபடுத்துவது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையாகும். கடந்த காலங்களிலும் அண்ணாமலை இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று அண்ணாமலை செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதேபோல், நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது, அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தனர். இதுமட்டுமின்றி பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாகியின் மீது பாஜக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பாஜகவினர் இத்துடன் நிறுத்திக்கொள்வதுடன் பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்தியது.

click me!