அடுத்த 15 நாட்களில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்.. இரண்டு அமைச்சர்கள் பதவி காலி.. அண்ணாமலை எச்சரிக்கை!

Published : May 27, 2022, 10:03 PM IST
அடுத்த 15 நாட்களில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்..  இரண்டு அமைச்சர்கள் பதவி காலி.. அண்ணாமலை எச்சரிக்கை!

சுருக்கம்

முதல்வர் யார்? நம்பர் ஒன் முதல்வர் என்றால், ஊழலில் நம்பர் 1 முதல்வர் என்பதால் சொல்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் இதே இடத்தில் பேப்பரை ரிலீஸ் செய்வோம். இதன் மூலம் இரண்டு அமைச்சர்களின் பதவி விலகல் இருக்கும்.

பிரதமர் உங்களைப் போல நிறைய பேரை பார்த்துவிட்டு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அரசியல் என்பது கும்மிடிப்பூண்டியிலிருந்து கோபாலபுரம் வரையிலானது என்று தமிழக பாஜக தலைவர் பாஜக அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். இந்த வரவேற்பு பிரதமரை மனம் நெகிழச் செய்தது. டெல்லி திரும்பும் முன் நம்முடைய கட்சித் தலைவர்களிடம் தமிழகத்தில் உணர்ச்சிகரமான வரவேற்பை பார்த்து மனம் நெகிழ்ந்துவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். வரவேற்பு அளித்த மக்களுக்கும், பாஜக சொந்தங்களுக்கும் நன்றி. நேரு உள் விளையாட்டரங்கில் பிரதமர் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பேசினார். பிரதமரின் பேச்சு எப்படி இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் கலாசாரத்தை தோளில் தூக்கி, இந்த மண்ணின் மீது எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதை பிரதமர் பேசும்போது தெரிந்தது. மேலும் 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் 11 திட்டங்களை அர்ப்பணித்துவிட்டு சென்றிருக்கிறார். இலங்கைக்கான உதவிகள் குறித்தும் பேசினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு, திமுக தலைவர் அரசியல் மேடையில் நின்றுகொண்டு தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பேசிய பேச்சைப் போலத்தான் இருந்தது. முதல்வர் பேசிய ஒவ்வொரு வரிக்கும்கூட, பதிலளிக்க வேண்டியது எங்களது கடமை. முதல்வரின் பேச்சில், தமிழக வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக நீதி சிந்தனையும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று சொன்னார். தன்னுடைய அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓர் அதிகாரியை சாதிப் பெயர் சொல்லி திட்டியதற்காக அவருக்கு கிடைத்த பரிசு துறை மாற்றம்தானே தவிர வேறெதுவும் இல்லை என்று மேடையில் ஸ்டாலின் பேசியிருக்க வேண்டும். அவருடைய உறவினர்கள், எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர், ‘நான் என்ன தீண்டத்தகாதவனா’ என்று சொன்னார்கள். அதைப்பற்றியும் தமிழக முதல்வர் மேடையில் பேசியிருக்க வேண்டும்.

இன்னும் பழைய வரலாற்றையெல்லாம் எடுத்துப் பார்த்தால் நிறைய விஷயங்கள் தெரியும். இதையெல்லாம் வைத்துக்கொண்டுதான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது, சமூக நீதி ஒன்றிணைந்த வளர்ச்சி என்று முதல்வர் பேசியிருப்பது எள்ளி நகையாட வேண்டிய விஷயம். தமிழக வளர்ச்சி பற்றி முதல்வர் பேசினார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக வேறு யாரும் வேலை செய்யவில்லையா? யாரும் உறுதுணையாக இல்லையா? தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ் மொழி பேசாதவர்கள் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள். திருப்பூர், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 லட்சம் தமிழ் மொழி பேசாத தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே வாக்குரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியர் என்ற அடிப்படையில்தான் இங்கிருக்கும் தமிழ் மக்களுக்காக வேலை செய்கிறார்கள். எனவே பிரிவினைவாதப் பேச்சை விட்டுவிட்டு, முதல்வர் பேசும்போது வரலாறு என்ன இருக்கிறதோ, அதை பேச வேண்டும்.

அண்மையில் தமிழகத்துக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை வந்தது. மத்திய அரசு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வந்த வாய்ப்பு இது. ஆனால், முதல்வர் இதுவரை கேரளாவைச் சேர்ந்த கிட்டெக்ஸ் என்ற ஒரே நிறுவனத்துடன் மட்டுமே பேசி கொண்டிருக்கிறார்.  திமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு என்று 13 இடத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நேற்று முதல்வர், தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு என்று தான் எழுதியதை மறந்துவிட்டு, மேடையில் ஒன்றிய அரசு என்று 11 முறை குறிப்பிட்டிருக்கிறார். ஏன் முதல்வருக்கு இந்தக் குழப்பம்?

நீட் பொம்மையை வைத்து நாடகமாடுகிறார்கள். பிரதமர் உங்களைப் போல நிறைய பேரை பார்த்துவிட்டு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அரசியல் என்பது கும்மிடிப்பூண்டியிலிருந்து கோபாலபுரம் வரையிலானது. மோடியின் அரசியல் என்பது இந்திய அரசியலையும் தாண்டி உலக அரசியலுக்கு சென்றுவிட்டார். எனவே, பிரதமரிடம் சிறுபிள்ளை போல் பேசாமல் சரியான முறையில் பேச வேண்டும். அவ்வாறு பேசினால், நீங்கள் கேட்காமலேயே தமிழகத்திற்கு வரவேண்டிய வேலைகளை பாஜக செய்யும். எனவே முதல்வர் இதுபோன்ற நாடகங்களை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான அரசியலை கையிலெக்க வேண்டும். அப்படி அடுத்த 4 ஆண்டு காலம் வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன். திராவிட மாடல் வளர்ச்சி என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு துறை வாரியாக நாங்கள் புத்தகம் வெளியிடப் போகிறோம்.

ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு அமைச்சராக இன்னும் 15 நாட்களில் ஊழல் பட்டியல் வரும். புத்தகத்தை வெளியிடுவோம். தமிழக மக்களுக்குத் தெரியும், இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா? முதல்வர் யார்? நம்பர் ஒன் முதல்வர் என்றால், ஊழலில் நம்பர் 1 முதல்வர் என்பதால் சொல்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் இதே இடத்தில் பேப்பரை ரிலீஸ் செய்வோம். இதன் மூலம் இரண்டு அமைச்சர்களின் பதவி விலகல் இருக்கும். பதவி விலகியே ஆகவேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!