
ஆண்டாளை அவமதித்ததாக கூறி கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமனுஜம் இருந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவரைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பல இந்து அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தின.
இது தொடர்பாக வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும், அவர் ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரே நாளில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
இந்நிலையில் வைரமுத்து பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் தான் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடங்குவேன் என ஜீயர் மீண்டும் அறிவித்தார். ஆனால் இது வரை கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை.
எனவே, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமனுஜம் வைரமுத்துவை கண்டித்து நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். மேலும், அனைத்து இந்துக்களும் இதில் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
.ஆனால் ஜீயர் நடத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரிதாக யாரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சிலர் மட்டும் ஜீயரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.