காலில் விழ வைத்து உள்ளூர ரசித்த ஜெயலலிதா... அதற்கு இப்படியொரு பழிவாங்கும் ஃப்ளாஷ்பேக்கா..?

By Thiraviaraj RMFirst Published Oct 31, 2019, 6:00 PM IST
Highlights

 தம்மை இழிவுபடுத்திவிட்டு திரும்பி வந்துள்ள அவரை சாட்சிப்படுத்த ஊடகங்கள் வரவழைக்கப்பட்டன. செய்தியாளர்களுக்கு புகைப்படமெடுக்க நல்ல ஒரு காட்சி கிடைக்கவில்லை என்று சாக்குச் சொல்லி சிரித்தபடி அமர்ந்திருந்தார்  ஜெயலலிதா. 

ஜெயலலிதா என்றால் நினைவுக்கு வருவதில் அவரது காலில் கட்சியினனரை விழ வைத்த கலாச்சாரத்திற்கு முக்கிய இடமுண்டு.   கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களும், ஜெயலலிதாவை விட மூத்தவர்களும் பகிரங்கமாக தங்கள் பணிவை காலில் விழுந்து வெளிக்காட்டியதை அவரும் உள்ளூர ரசித்தார். 

அதிமுகவில் ஜெயலலிதா கோலோச்சத் தொடங்கியிருந்தர். அப்போது கிராமப் புறங்களுக்கு ஹெலிக்காப்டரில் சென்ற போது ஒரு வேடிக்கையான நிகழ்வு நடந்தது. அவர் ஹெலிக்காப்டரில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தபோது, வேட்டி அணிந்து வரிசையாக நின்ற கட்சி தொண்டர்கள் நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்தார்கள்.  எழுந்து நின்றபோது அவர்களது வெள்ளை வேட்டி முழுவதும் செம்மண் புரண்டு சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது, கண்கொள்ளாக் காட்சி. 

ஒருமுறை காலில் விழுவது குறித்து ஆங்கிலப்பத்திரிக்கையாளர்  அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, ’எனது ஆதரவாளர்கள் என் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்காக  தாமாகவே முன்வந்து அதைச் செய்வதால் என்னால் அதைத் தடுக்க முடியவில்லை’ எனக் கூறினார். இது மேம்போக்கான பதில். காலில் விழுவதை ஜெயலலிதா விரும்பினார்.  அதை ஊக்குவிக்கிறார் என்பது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் உறுதிப்படுத்தின. 

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவை விட்டு விலகிய கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைய திரும்பி வந்தார். தம்மை இழிவுபடுத்திவிட்டு திரும்பி வந்துள்ள அவரை சாட்சிப்படுத்த ஊடகங்கள் வரவழைக்கப்பட்டன. செய்தியாளர்களுக்கு புகைப்படமெடுக்க நல்ல ஒரு காட்சி கிடைக்கவில்லை என்று சாக்குச் சொல்லி சிரித்தபடி அமர்ந்திருந்தார்  ஜெயலலிதா. பெரிய மீசையும் தடித்த உருவமும் கொண்ட கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை ஜெயலலிதா முன் நான்கு முறை மண்டியிட வைத்தார்கள். அந்தப் புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. 

1991ல் சட்டமன்றதேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் சென்னை மெரீனாவில் கூடியது. ராஜீவ் காந்தி வழக்கம்போல தனி விமானத்தில் வந்தார். அந்தக் கூட்டத்துக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆர்.எம்.வீரப்பன் வரவில்லை. நாவலர் தலைமையுரை ஆற்றினார். அந்த மேடையில்தான் ஜெயலலிதா காலில் விழும் கலாசாரம் அப்பட்டமாகத் தொடங்கியது. சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தபோது, கே.ஏ.கே, மயிலை ரங்கராஜன், தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதர் தவிர மற்ற அனைவரும் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். அதைப் பார்த்த ராஜீவ் காந்தியே கொஞ்சம் அசந்து போனார்.

click me!