கேரளாவில் சோலார் பேனல் வழக்கு மூலம் சர்ச்சையில் சிக்கிய நடிகை சரிதா நாயர் அதிமுகவில் இணையத் திட்டமிட்டு தோல்வியில் முடிந்த தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் சோலார் பேனல் வழக்கு மூலம் சர்ச்சையில் சிக்கிய நடிகை சரிதா நாயருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் மோசடி வழக்கு மூலம் பிரபலமானவர் சரிதா நாயர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹைபி ஈடன் என பலருக்கும் சோலார் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
சோலார் பேனல் தொடர்பான ஆலோசனைக்கு சென்ற போது உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் குற்றம் சாட்டினார். சரிதா நாயரின் இந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஊழல் பிரச்னை, கேரள சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட சரிதா நாயர், பின்னர் ஜாமீனில் வெளிவந்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியில் பேப்பர் கப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அடுத்து நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளருமான பச்சைமாலை சந்தித்து தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைய விரும்பம் தெரிவித்தார்.
அமமுகவில் இணைவதற்கான காரணத்தை அவர் வெளியிட்டார். ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருந்தேன். அப்போது, சென்னை சென்று ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்தச் சமயத்தில் மெட்ரோ ரயில் துவக்க விழாவுக்குப் போன ஜெயலலிதா, அதைத் தொடர்ந்து உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் இறந்துவிடுவார் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஜெயலலிதாவுக்கு அப்படி நடந்திருக்காவிட்டால், அன்றே நான் அ.தி.மு.க-வில் இணைந்திருப்பேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அத்துடன் ஒரு பெண்ணைப் பெண்ணாகப் பார்க்கும் இடம் தமிழ்நாடு. இந்த மரியாதை கேரள அரசியலில் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. கேரளத்தில் நான் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சென்றாலோ அல்லது பி.ஜே.பி-யில் சேர்ந்தாலோ வேறுவிதமாக அமைந்துவிடும். எனவே, எனக்கு எல்லாமே தமிழ்நாடுதான் என முடிவுசெய்தேன்’’எனத்தெரிவித்துள்ளார் சரிதா நாயர்.