ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சட்டம் ரத்து... உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Aug 6, 2021, 5:22 PM IST
Highlights

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணபங்களை வரவேற்று வேலூர், திருவள்ளூர் பல்கலை கழகம் வெளியிட்ட அறிவிப்ப‍ை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணபங்களை வரவேற்று வேலூர், திருவள்ளூர் பல்கலை கழகம் வெளியிட்ட அறிவிப்ப‍ை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியும், பதிவாளரை நியமிக்க கோரியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்திற்கான துணை வேந்தர் நியமிக்கப்பட்டு பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் கடந்த அரசால் ஒதுக்கப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்திலேயே செயல்படுகிறது. இன்னும் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குள் வரும் பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்க முடியாது என்று வாதிட்டார்.

 தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கிய பின் துணைவேந்தர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகம் தொடர்ந்து பழைய தாலுகா அலுவலக கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் மாணவர்களின் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று கூறினார்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறி அதுதொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அமைக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்யபோவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தை இயற்ற சட்டப்பேரவைக்கு எந்த அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சட்டத்தை ரத்து செய்ய முடியும். அதன் அடிப்படையில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ள போதும் அது வரை அச்சட்டம் அமலில் இருக்கும் என்பதால் அச்சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். எனவே, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விழுப்புரம் மையத்தின் மூலம் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை. அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் வழக்கை முடித்து வைத்தனர். 

விசாரணையின்போது, ஆட்சி என்பது சைக்கிள் போல மாறி மாறி வரும் என்றபோதும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பின்பற்ற வேண்டும் என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

click me!