
மருத்துவமனையில் ஜெ. ஜூஸ் அருந்துவது போன்ற வீடியோ எடுக்கப்பட்டது அப்போலோ மருத்துவமனையா? அல்லது போயஸ் இல்லமா? என்ற கேள்வி எழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த விடியோ ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.
அந்த வீடியோவில், படுக்கையில் இருக்கும் ஜெயலலிதா நைட்டி உடையில், டிவி பார்த்துக் கொண்டே ஜூஸ் அருந்தும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவில், ஜெயலலிதா ஜூஸ் அருந்துவது போன்ற காட்சி குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, இது ஆர்.கே.நகர் தேர்தலுக்காகத்தான் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டதாக கூறினார்.
இந்த வீடியோவை பார்க்கும் போது, ஜெயலலிதா சிகிச்சையின் போது, ஒரளவு உடல்நலத்துடன் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. நாளை நடைபெற உள்ள தேர்தலில் ஜெயலலிதா, சிகிச்சை பெற்ற வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆனால், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ அப்போலோவா? அல்லது போயஸ் இல்லமா? என்ற கேள்வி எழுவதாக திருமாவளவன் கூறினார். வீடியோ என்று எடுக்கப்பட்டது
என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.