
வீடியோ ஆதாரம் இருந்தால் வெளியிடவேண்டியதுதானே என்றும் வீடியோவை வச்சி வியாபாரம் செய்கிறார்களா என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சைப்பலனின்றி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே ஜெயலலிதாவை பார்க்க அவரது தோழி சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் மட்டுமே வெளியானது.
இதற்கு அப்போது அமைச்சர்களும் விசுவாசிகளும் கூட சப்பை கட்டு கட்டி வந்தனர். இதையடுத்து பன்னீர் தரப்புடன் எடப்பாடி அமைச்சரவை கூட்டு சேர்ந்ததும் டிடிவியையும் அவரது குடும்பத்தையும் கட்சியை விட்டு விலக்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தரப்பு தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் போராடி வருகிறது. இந்நிலையில், நேற்றுடன் பிரச்சார நேரம் முடிவடைந்த நிலையில், ஜெ சிகிச்சை பெற்று வந்த வீடியோ ஒன்றை டிடிவி தரப்பு வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜெ மேல் சிகிச்சை குறித்து அமைச்சர்கள் ஆலோசித்த வீடியோகூட எங்களிடம் உண்டு என்றும் தேவைப்பட்டால் வெளியிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வீடியோ ஆதாரம் இருந்தால் வெளியிடவேண்டியதுதானே என்றும் வீடியோவை வச்சி வியாபாரம் செய்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவை பற்றி பேச டிடிவி தரப்புக்கு அறுகதை உள்ளதா என்றும் ஜெ இல்லை என்பதால் வெற்றிவேல் என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது எனவும் தெரிவித்தார்.
மேலும் வீடியோவை வைத்துக்கொண்டு வெளியிடாமல் சர்ச்சைக்கு இடம் கொடுத்ததற்கே அவர்கள் மேல் வழக்கு பதிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.