
டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டார். ஆனால் இதற்கு தேர்தல் ஆணையம் அதிருப்தி வெளியிட்டது. இதை அடுத்து, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஜெயலலிதா வீடியோ ஒளிபரப்பு ஊடகங்களில் நிறுத்தப் பட்டுள்ளது.
இந்த வீடியோவை இப்போது வெளியிட்டது ஆர்.கே.நகர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதா வீடியோ வெளியிடப்பட்டது தேர்தல் விதி மீறல் என்று குறிப்பிட்டார். மேலும், பிரச்சாரம் முடிந்த பிறகு வீடியோவை வெளியிட்டுள்ளது தேர்தல் விதி மீறல்தான் என்று குறிப்பிட்ட லக்கானி, இந்த வீடியோவை வெளியிட்ட செய்தி சேனல்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை ஒளிபரப்புவதை சேனல்கள் நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து டிவி ஊடகங்கள், இந்த வீடியோவை ஒளிபரப்புவதை நிறுத்திக் கொண்டனர்.
மேலும், உள்நோக்கத்துடன் ஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.