
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, நேற்று தண்ணீர் கேட்டு குடித்ததாக செய்திகள் வந்தன. அப்போது, தேங்க்ஸ் ஃபார் யுவர் எக்ஸ்லன்ட் டிரீட்மென்ட் என அங்கிருந்த டாக்டர்களிடம் ஆஙகிலத்தில் பேசிய தெரிகிறது.
கடந்த மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, மூச்சு திணறல் மற்றும் நீர் சத்து குறைவு இருப்பது தெரிந்தது.
இதைதொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலோ மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவருக்கு, உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குணமாக வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர், பல்வேறு கோயில்களில் பூஜை, பரிகாரங்கள், யாகங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த பிசியோ தெரபி நிபுணர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். காலை 9 மணிக்கு வந்த அவர்கள், மாலை 6 மணி வரை சிகிச்சை அளித்ததாக தெரிகிறது.
இதை தொடர்ந்து மாலை 4.50 மணிக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலோ, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து, இரவு 7 மணிக்கு புறப்பட்டு சென்றார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, தண்ணீர் கேட்டதாகவும்,தேங்க்ஸ் ஃபார் யுவர் எக்ஸ்லன்ட் டிரீட்மென்ட் எனவும் அங்கிருந்த டாக்டர்களிடம் ஆங்கிலத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.