
ஜெயலலிதா தமிழக முதல்வராகவும் - அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் அல்லது கட்சிப் பதவியில் மட்டுமேயோ கோலோச்சிய காலத்தில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அவர் அருகில் ஒரு இளைஞரை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படி கவனித்திருந்தால் நீங்கள் சற்றே நுணுக்கமான அரசியல் பார்வையாளர்தான்.
ஜெயலலிதா பேசும் பொதுமேடை என்றால் அதன் வலது ஓரத்திலும், அவர் பேசும் பிரசார வேன் என்றால் அதன் கடைசி இருக்கையிலும் அவரைக் காணலாம். வட்ட முகம், சிம்பிளான பிளெயின் கலரில் உடை, பள்ளி மாணவன் போல் வாரி சீவிய கேசம், நெற்றியில் விபூதி, கையில் சில ஃபைல்கள் அல்லது சில நேரங்களில் சிறிய சைஸ் பேக்.
அந்த நபர்தான் பூங்குன்றன். ஜெ. வின் பர்ஷனல் உதவியாளர். புலவர் சங்கரலிங்கத்தின் மகன் தான் இந்த பூங்குன்றன். ஜெயலலிதா கண் இமைக்கும் நொடியில், அவர் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பார். ஜெயலலிதாவுக்கான அறிக்கைகளை தயார் செய்வது, அப்டேட்ஸ்களை அவரது கவனத்துக்கு கொண்டு செல்வது என்று துவங்கி பூங்குன்றனின் பணிகள் மிக முக்கியமானவையாக இருந்தன.
ஒரு அதிகார மையமாக பார்க்கப்படுவதற்கு உரிய அத்தனை தகுதிகளும் இருந்தாலும் கூட, அதை பெரிதாய் வெளியே காட்டிக் கொள்ளாத நபராகவே வலம் வந்தார். ஜெ.,வின் கார் டிரைவர்கள் கூட அக்கட்சியின் மிக முக்கிய மனிதர்களாலும் பவ்யமாய் வணங்கப்பட்ட நிலையில், அதை எதிர்பாராத நபராகவே நடந்து கொண்டார் பூங்குன்றன். காரணம், ‘அம்மாவின் கோப பார்வை பட்டால் என்னாகும்னு எனக்கு தெரியும்’ என்று தன்னிடம் வழிபவர்களிடம் சட்டென சொல்லி நகர்வார். ஆனாலும் ’பூங்குன்றன் தெளிவான நிர்வாகி’ என்று அவர் மீது விமர்சனம் வைப்போரும் உண்டு.
ஜெ., காலத்தில் அ.தி.மு.க.வில் எந்த அமைச்சர், மா.செ. மீது விசாரணை என்றாலும், பதவி உயர்வு என்றாலும் அவர்களை போயஸுக்கு வர சொல்லி அழைப்பது பூங்குன்றன் தான். அவரிடமிருந்து போன் வந்தாலே நடு நடுங்கித்தான் அட்டெண்ட் பண்ணுவார்கள் கழக முக்கியஸ்தர்கள். அட்டெண்ட் பண்ணி ‘அண்ணே’ என்று அவர்கள் சொன்னதும், ‘ஒண்ணுல்ல…’ என்றுதான் ஆரம்பிப்பார். அடுத்து அவர் வைக்கப்போவது வெடிகுண்டா அல்லது பாயாசமா என்பது அடுத்த சில நொடிகளில்தான் புரியும்.
அப்பேர்ப்பட்ட பூங்குன்றன் ஜெ., மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வினுள்ளே பல திசைகளில் அலைந்து, ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் ஆஜராகி சில தகவல்களை தந்து என்று பரபரப்பாக பார்க்கப்பட்டார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் மிக துடிப்பாக இயங்கும் பூங்குன்றன் அவ்வப்போது அ.தி.மு.க.வின் நிலையை நினைத்து வருந்துவார், அறிவுரை தருவார், ஆலோசனை வழங்குவார். சில நேரங்களில் நொந்தும் கொள்வார் தற்போதைய தலைமையை நினைத்து.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரமான இன்று ‘எங்கும் பண மழை. என்ன மக்கள் நிலை! காத்திருங்கள்’ என்று சூசகமாக ஒரு போஸ்ட்டை தட்டிவிட்டுள்ளார்.
அதற்கு ‘பணமழை பொழிவது உங்க கட்சியா? ஆளுங்கட்சியா? யாரை சொல்றீங்க!’ என்று குடைந்தெடுத்துள்ளனர் சிலர். ஆனால் பூங்குன்றனிடம் நோ ரெஸ்பான்ஸ்.
இதுக்கு பதில் சொல்ல அவரென்ன ஏமாந்த கோழியா!?