ஜெயலலிதா மரணம் விசாரிக்க கோரும் 3 வழக்குகள் - ஒன்றாக விசாரிப்பதாக தலைமை நீதிபதி ஒத்திவைப்பு

First Published Jan 4, 2017, 3:16 PM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ நிபுணர்கள், சி.பி.ஐ. அடங்கிய குழுவை அமைக்க கோரி அதிமுக பிரமுகர், மற்றும் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்த  வழக்கை  ஒரே வழக்காக வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக  கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென கடந்த மாதம் 5ம் தேதி அவர் மரணமடைந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜோசப் வழக்கு தொடர்ந்தார்.

கிறிஸ்துமஸ் விடுமுறை கால நீதிமன்றத்தில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி வைத்திய நாதன் தலைமையிலான அமர்வு, தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், ஜெயல்லிதாவின் உடலை தோண்டி எடுத்தால் மட்டுமே உண்மை வெளிவருமா என கேள்வி எழுப்பி, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஞானசேகரன் என்பவர் புதிய வழக்கை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ நிபுணர்கள், சி.பி.ஐ. அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை பறிமுதல் செய்ய அக்குழுவுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை ஜெயல்லிதாவுக்கு வழங்கிய சிகிச்சை ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் சேர்த்து வரும் 9ம் தேதி இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்து வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதேபோல, ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. , என்.ஐ.ஏ உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய சிறப்பு புலன்விசாரணைக் குழு அமைக்கவும், ஜெயலலிதா உடலை பாதுகாக்க கோரியும் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

click me!