
100 நாட்களில் முதல்வராவதற்கு முதல்வர் பதவி ஒன்றும் கடையில் விற்கும் பொம்மையல்ல என கமல்ஹாசனை கிண்டல் செய்துள்ளார் நிதியமைச்சர் ஜெயக்குமார்.
கமலின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் தனியாக தேர்தலை சந்தித்து முதல்வராவேன் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கமலை விமர்சித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
அரசியலுக்கு வந்து முதல்வராக வேண்டும் என நினைக்கும் கமல், டுவிட்டரில் மட்டும் செயல்பட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுடன் மக்களாக அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். அப்பொழுதுதான் ஏற்பார்களே தவிர டுவிட்டரில் மட்டும் செயல்பட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள். முதலில் கமல் எம்.எல்.ஏ ஆகட்டும். பின்னர் பார்க்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவேன் என கூறிய தினகரனுக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார். கட்சியில் உரிமையில்லாத தினகரன் எப்படி பொதுக்குழுவை கூட்டுவார் என கேள்வியெழுப்பினார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை கமிஷன் விரைவில் அமைக்கப்படும். விசாரணை முடிந்து தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.