முதல்வர் பொறுப்பு யாருக்கும் கிடையாது... அது அவரிடம்தான் இருக்கும்... எடப்பாடி துறைகள் யாருக்கு என்ற கேள்விக்கு ஜெயக்குமார் பளீச் பதில்!

By Asianet TamilFirst Published Aug 27, 2019, 7:02 AM IST
Highlights

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெறும். தமிழகத்துக்கு முதலீடுகளைக் கொண்டுவந்து சேர்ப்பார். இதனால் தமிழகம் பொருளாதாரத்தில் ஏற்றம் காணும். புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். 

முதல்வர் வெளிநாடு செல்வதால் அவருடைய பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்று  தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12 நாட்களுக்கு அரசு முறை பயணமாக லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். நாளை காலை 9.45 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் எடப்பாடி பழனிச்சாமி லண்டனுக்குப் புறப்படுகிறார். முதல்வருடன் அமைச்சர்கள் குழு, அரசு செயலாளர்கள் குழு ஒன்றும் செல்ல உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அவர் வகித்துவரும் துறைகள் யாரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் துறைகளை ஒப்படைக்கமாட்டார் என்றும் தனக்கு நெருக்கமான கொங்கு அமைச்சர்களிடம் ஒப்படைப்பார் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், முதல்வர் பொறுப்பை யாரிடமும் எடப்பாடி பழனிச்சாமி ஒப்படைக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் வெளிநாடு செல்வதால் அவருடைய பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. ‘கேர் டேக்கர்’ என்ற பொறுப்பை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டுதான் செல்ல வேண்டும் என்றில்லை. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எங்கிருந்து வேண்டுமானாலும் பணியைச் செய்யவும் உத்தரவிடவும் முடியும். அதனால், துறைகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல தேவையில்லை” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் ஜெயக்குமார் கூறுகையில், “தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெறும். தமிழகத்துக்கு முதலீடுகளைக் கொண்டுவந்து சேர்ப்பார். இதனால் தமிழகம் பொருளாதாரத்தில் ஏற்றம் காணும். புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். எதிலும் குற்றம் காண்பதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வல்லவர். அந்த அடிப்படையில் முதல்வர் வெளிநாடு செல்வதையும் விமர்சிக்கிறார். மு.க. ஸ்டாலின் இங்கே ஊழலில் சம்பாதித்ததை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்காக சென்றார். ஆனால், நாங்கள் அவ்வாறு செல்லவில்லை” என்று தெரிவித்தார். 

click me!