மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும், முதலமைச்சர் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் மழை பாதிப்பு
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கினார். இதன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மழைக்கு முன்னெச்சரிக்கை எடுப்பது அரசின் கடமை. வரும் முன் காப்பவன் தான் அறிவாளி. மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும்.
undefined
கால்வாய்களை தூர் வார வேண்டும். ஆனால் அரசு இதில் தோல்வி அடைந்துவிட்டது. விமர்சனங்களை தவிர்க்க பிரதான சாலைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளை கைவிட்டுவிட்டதாக விமர்சித்தார். குடியிருப்பு பகுதிகளில் மழை நீரில் கழிவு நீர் தேங்கியுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
4000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக சொன்னார்கள் அதுவெல்லாம் என்ன ஆயிற்று? சென்னை மாநகராட்சி தூங்கிவிட்டது. முதலமைச்சர் தொகுதியே நீந்தி செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது. சென்னையை விட சென்னை புறநகர் மிக மோசமான நிலையில் உள்ளது. அமைச்சர்கள் சொல்லும் பொய்யை போல யாரும் சொல்ல முடியாது.
இப்படி பொய் பேசுகிறோமே மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட இல்லை. 4000 கோடி செலவு செய்ததற்கு 400 படகு வாங்கி கொடுத்திருந்தாலும் மக்கள் பயனடைந்திருப்பர். நிர்வாக திறமை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது. வானிலை மையம் இன்று மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுத்த போதிலும் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்கவில்லை அவர்கள் எப்படி கல்லூரிகளுக்கு செல்வார்கள் என்பதை அரசு யோசிக்க வேண்டாமா?
முதலமைச்சர் பேச்சை மதிப்பதில்லை
சென்னையில் பாதிப்பில்லை என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது. முதலமைச்சர் வார்த்தைக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் முதலமைச்சர் அதனை அதிகாரிகள் செய்கிறார்களா என கண்காணிக்க வேண்டும். அதனை முதலமைச்சர் செய்வதில்லை. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மீது மரியாதையே இல்லையென ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்
இந்த தேதிகளில் சென்னையில் மிக கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..