
பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே அணிகள் இணைப்பு நடைபெற்றுள்ளதாகவும், ஜெயலலிதாவின் ஆன்மா, சசிகலாவை ஒதுக்காது என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இன்று இணைந்தன. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அணிகள் இணைப்பு நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலியங்கம், விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்றும் சசிகலா நீக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
வைத்தியலிங்கத்தின் இந்த பேச்சால், டிடிவி, சசிகலா தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், திவாகரன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், அணிகள் இணைப்பால் எந்த பயனும் இல்லை. இது ஒட்டுமொத்த துரோகத்தின் உச்சகட்டம் என்றார். அதிமுக இணைப்பை அனைவரும் ஏற்கவில்லை.
பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே அணிகள் இணைப்பு நடைபெற்றுள்ளது. பொதுக்குழுவைக் கூட்ட பொது செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
ஜெயலலிதாவின் ஆன்மா, சசிகலாவை ஒதுக்காது. அணிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆட்சி, கட்சி இரண்டையும் காப்பாற்ற முடியாது.
ஜெயலலிதா மரணத்தில் கிளப்பிய பிரச்சனையை சரிசெய்ய வேண்டிய கடமை அதிமுக தலைவர்களுக்கு உள்ளது. அணிகள் இணைப்பால், பிரச்சனை முடியப்போவதில்லை என்றும் பிரச்சனை தொடரும்.
இவ்வாறு திவாகரன் கூறினார்.