
மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாரும் கருத்துக்களைக் கூற வேண்டாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில், கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும்போது, அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோல் சீமான் கூறும்போது, அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா கூறும்போது, ஜெயலலிதா மரணம் குறித்து சிறிது சிறிதாக கூறுவதை விடுத்து, உண்மையை மொத்தமாக கூறிவிடலாமே என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாரும் கருத்துக்களை கூற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெ. மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நியாயமான விசாரணை நடைபெறும். எனவே தேவையில்லாமல் தினகரனோ, எதிர்கட்சியினரோ ஜெயலலிதா மரணம் தொடர்பாக கருத்துக்களை கூற வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும், அப்படி தேவைப்பட்டால் விசாரணை ஆணையம் மூலம் கருத்துக்களைக் கூறலாம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.