
தேர்தல் பரப்புரை நேற்று நிறைவுபெற்று நாளை ஆர்.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோ வெளியிடப்பட்டது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்துசெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்து வந்தனர்.
75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. சென்னை, எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணை கமிஷன் முன்பு டாக்டர்கள் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். இன்று தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தற்போது ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஜெயலலிதா, பழச்சாறு அருந்தும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை முடிவுற்று தற்போது தேர்தல் நடைமுறை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் விதத்தில் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என்பது தான் விதிமுறை. ஆனால் இந்த வீடியோ வெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த இந்த வீடியோ வெளியிடப்பட்டது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.