அவசர சட்டம் கொண்டு வாருங்கள்- தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

 
Published : Jan 19, 2017, 03:50 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
 அவசர சட்டம் கொண்டு வாருங்கள்- தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சுருக்கம்

சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து , அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வாருங்கள் என்று தமிழக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை: 

ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது” என்று பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இன்று தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. 

இப்படியொரு சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும், போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரநிதிகளையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரை சந்தித்து முறையிடுமாறு தமிழக முதலமைச்சருக்கு நேற்றைய தினம் கோரிக்கை விடுத்தேன். 

சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி தமிழகமெங்கும் தன்னெழுச்சியுடன் மாணவர்களும், மக்களும் நடத்தும் போராட்டத்தின் உணர்வுகளை மத்திய அரசு உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசும் கைவிரித்து விட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இந்த அசாதரண சூழ்நிலை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து நாளைக்கே சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையும் கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும். 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையையும் பெறலாம். பிரதமர் நரேந்திரமோடி அவர்களே, “மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவி செய்யும்” என்று முதல்வருடான சந்திப்பில் தெரிவித்ததாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

பிரதமரின் இந்த உறுதிமொழியை துணைக்கு வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரபல சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, அந்த தீர்ப்பில் திராவிட முன்னேற்றக் கழக அரசின் “ஜல்லிக்கட்டு நெறிமுறை” சட்டத்தில் ஏதேனும் குறைகள் சுட்டிக்காட்டப் பட்டிருப்பின் அதையும் நிவர்த்தி செய்து புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை, தமிழக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 

ஜல்லிக்கட்டு நடைபெற முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு