சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி ஜெய்பீம் படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அருள்மொழி இந்த வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியோர் மீது வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து ஜெய் பீம் படம் ஓடிடி இணையதளத்தில் வெளியானது. இந்த திரைப்படம் மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு மற்றும் பாராட்டை பெற்றுள்ளது. அதே அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த படத்தில் இடம்பெற்ற காட்சியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததற்கும், காலண்டரில் வன்னியர் சங்கம் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் வன்னியர்சங்கங்களும், பாமகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்ட பிறகும் பிரச்சனைகள் ஓயவில்லை.
இது விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா ரூ.5 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி வன்னியர் சங்க வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எந்த ஒரு விருதையும் மத்திய அரசு வழங்கக் கூடாது எனவும் வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக இயக்குநர் ஞானவேலும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி ஜெய்பீம் படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அருள்மொழி இந்த வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக சாட்சியங்களாக சேர்க்கப்பட்டவது யாரென்று பார்த்தால் இந்த வழக்கை தொடுத்த வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, ஜெய் பீமு திரைப்படத்தில் வசனங்களை வட்டார வழக்கில் திருத்தம் செய்து கொடுத்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் , ராஜகண்ணு மனைவி பார்வதி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெய் பீம் படக்குழுவிடமிருந்து பெற்ற ஊதியத்தை திருப்பி கொடுத்தவர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.