SI க்கு ஸடாலின், எடப்பாடின்னு பேரு வைக்க முடியுமா.? சூர்யாவை சட்டையை பிடித்து உலுக்கும் காடுவெட்டி குரு மகன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 23, 2021, 12:00 PM IST
Highlights

ஜெய் பீம் திரைப்படத்தில் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தை தாக்கும் வகையில் காட்சி அமைப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அக்னி குலசம் வில்லன் வீட்டில் காலண்டமாக வைக்கப்பட்டுள்ளது. 

அக்னி கலசத்திற்கு மாற்றாக உதயசூரியன் சின்னத்தையோ அல்லது இரட்டை இலை சின்னத்தையோ உங்களால் வைக்க முடியுமா என்றும், அல்லது  குரு என்ற பெயருக்கு மாற்றாக எடப்பாடி  பழனிச்சாமி என்றோ மு. க ஸ்டாலின் என்றோ உங்களால் பெயர் வைக்க முடியுமா என நடிகர் சூர்யாவுக்கு காடுவெட்டி குரு மகன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருக்கும் நீங்கள் குருவின் பெயரை வைக்கும் போது மட்டும் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஏன் அந்தோணிசாமி என்ற பெயர் கிறிஸ்தவர் பெயர் என்பதால் அதை வைக்க உங்களுக்கு துணிவில்லையா  என்றும் கனலரசன் வினா எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் இவ்வாறு கூறியுள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் காடு வெட்டி குருவின் குடும்பத்தினர் சூர்யாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குருவின் மருமகன் மனோஜ் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால் திரையரங்குகளை கொளுத்துவோம் என்றார். அதைத் தொடர்ந்து பேசிய குருவின் மகனும் மாவீரன் மஞ்சள்படையின் நிறுவனருமான கனலரசன், சூர்யா இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லை என்றால் அவர் வெளியில் நடமாட முடியாது,  5 போலீஸ் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது என எச்சரித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் சூர்யாவுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 

ஜெய் பீம் திரைப்படத்தில் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தை தாக்கும் வகையில் காட்சி அமைப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அக்னி குலசம் வில்லன் வீட்டில் காலண்டமாக வைக்கப்பட்டுள்ளது. இது ஏன் என தட்டி கேட்டால் இவர்கள் கருத்து சுதந்திரம் என்கிறார்கள். கருத்து சுதந்திரம் பேசுகிற ஞானவேலாக இருக்கட்டும், சூர்யாவாக இருக்கட்டும், உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன், உங்களுக்கு தைரியம் இருந்தால் வன்னியர் சங்கம் கலசத்துக்கு மாற்றாக அங்கு உதயசூரியன் கேலண்டரியோ, இரட்டை இலை வரைந்த கேலண்டரியோ வைக்க முடியுமா? அதேபோல் குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் என்றோ, எடப்பாடி பழனிசாமி என்றோ உங்களால் பெயர் வைக்க முடியுமா? அந்த அளவிற்கு தைரியம் இருக்கிறதா உங்களுக்கு. இதையெல்லாம் செய்ய துணிவில்லாத உங்களுக்கு அந்த இடத்தில் வன்னியர் சங்க காலண்டரை வைத்துவிட்டு அவருக்கு குரு என நீங்கள் பெயர் வைத்திருப்பது நியாயமா? இதைக் கேட்டால் சூர்யா மிக தன்மையாக ஒரு பதில் அளிக்கிறார் என்கிறார்கள்.

அவர் அந்த பதிலில் பெயர் அரசியல் செய்ய வேண்டாம் என்கிறார், உண்மையிலேயே இந்த படத்தை நீங்கள் ஒரு நல்ல கண்ணோட்டத்துடன் எடுத்திருந்தால், பாதிக்கப்பட்ட பார்வதியம்மாவை சந்தித்து அவரிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டாமா? மொத்தத்தில் நீங்கள் செய்திருப்பது திருட்டுத்தனம். இது அனைவருக்குமே தெரிகிறது. நீங்கள் கோடிகோடியாக பணம் சம்பாதித்து விட்டு பார்வதி அம்மாளுக்கு வெறும் 10 லட்சமா? உண்மையிலேயே நீங்கள் நியாயவான்களாக இருந்தால் உங்க லாபத்தில் சரிபாதியை பார்வதிக்கு கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!