நாளைக்குள்ள வேலைக்கு திரும்பலைன்னா அப்புறம் இருக்கு உங்களுக்கு வேடிக்கை !! எச்சரித்த பள்ளிக் கல்வித்துறை !!

By Selvanayagam PFirst Published Jan 27, 2019, 6:26 AM IST
Highlights

ஆசிரியர்கள் நாளைக்கு பணிக்கு வரவில்லை என்றால்  அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடி வினையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்  நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தொடர் வேலைநிறுத்ததில் ஈடுபட்ட தமிழகம் முழுவதும் 420 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோவை சேர்ந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள்  பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்றும், பணிக்குவராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தற்காலிகமாக பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!