நீங்க மக்கள் தலைவர்கள் இல்ல.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அல்ல.. அதிமுகவுக்கு எதிராக கொந்தளித்த தீபா

By Asianet TamilFirst Published May 30, 2020, 9:35 AM IST
Highlights

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என மக்களிடம் இவர்கள் கேட்டார்களா? அல்லது அதிமுகவின் தொண்டர்களிடம்தான் கேட்டார்களா? ஒரு முறைகூட கேட்காமல் அரசு எப்படி அந்த முடிவை எடுக்கலாம்? ஆனால், நான் மக்களிடம் இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்தினேன். அதில், 80 சதவீதம் பேர் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டாம் எனத்தெரிவித்தனர்.
 

இவர்கள் (அதிமுக தலைவர்கள்) யாரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் இல்லை. அதிமுகவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் இல்லை. அவர்களின் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் திருத்தம் செய்தது. இதனையத்து தீபா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை அல்ல வாரிசுகள் அல்ல. முதல் நிலை வாரிசு என நேரடியாகவே சென்னை உயர் நீதிமன்றம் உரிமையை எங்களுக்கு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டும் என்பதில் பலரும் உள்நோக்கத்துடன் உள்ளனர். அதிமுக அரசு இதை அரசியலாக்க நினைக்கிறது. ஆனால், நீதிமன்றம் மூலம் அதிமுக அரசுக்கு கிடைத்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால், குழந்தைதனமாக அரசு நடந்து கொள்கிறது.


இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், வேதா இல்லத்துக்கு எப்படி வரலாம், இதை கண்டிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறுகிறது. இதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. நான் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரக்கூடாது என்ற நோக்கம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள்தான் நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகும் வேதா இல்லத்தின் வாசலுக்கு கூட வரக்கூடாது எனச் சொல்கிறார்கள். போயஸ் தோட்ட சாலைகளுக்கு நீங்கள் யாரும் உரிமையாளர்கள் கிடையாது. பொதுமக்கள் அங்கே பயணிக்கலாம். அங்கே செல்ல அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? ஜெயலலிதாவின்  அண்ணன் மகள் என்பதைத் தாண்டி அவரால் வளர்க்கப்பட்ட என்னை இறுதிச் சடங்கில்கூட பங்கேற்க விடாமல் தடுத்தது ஏன்?


ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதும் என்னை அனுமதிக்காமல் இருந்தது தனிநபர் மட்டுமல்ல, அன்று காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசும்தான். ஒரு தனிநபரின் சொத்தை எடுக்க வேண்டும் என்றால் மக்களின் பொது காரியத்துக்கு மட்டுமே எடுக்க வேண்டும். அதில் தவறு இருக்கிறது என்பதை  நாங்கள் சுட்டிக்காட்டினோம். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 
இனியும் நான் வேதா இல்லத்துக்கு போகலாமா, வேண்டாமா என்பதை மக்களே சொல்லட்டும். என் அத்தை ஜெயலலிதாவே வீட்டுக்கு வரக்கூடாது என்று என்னை சொன்னது கிடையாது. அதைச் சொல்வதற்கு இவர்கள் யார்? இதற்கு மேலும் இன்னும் எத்தனை நாட்களுக்கு வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப் போகிறோம் என அதிமுக அரசு மக்களை ஏமாற்றப் போகிறது? ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என மக்களிடம் இவர்கள் கேட்டார்களா? அல்லது அதிமுகவின் தொண்டர்களிடம்தான் கேட்டார்களா? ஒரு முறைகூட கேட்காமல் அரசு எப்படி அந்த முடிவை எடுக்கலாம்? ஆனால், நான் மக்களிடம் இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்தினேன். அதில், 80 சதவீதம் பேர் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டாம் எனத்தெரிவித்தனர்.


இவர்கள் யாரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் இல்லை. அதிமுகவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் இல்லை. அவர்களின் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். முறையாக அடுத்த தேர்தல் நடைபெற்றால், அதில் 10 இடங்களைக்கூட தற்போது ஆட்சியால் பெற முடியாது” என்று தீபா காட்டமாகத் தெரிவித்தார்.

click me!